கைவிடப்படும் எய்ட்ஸ் நோயாளிகள் - சுகாதாரத்துறையில் இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலம் என்பதெல்லாம் பொய்யா?

கைவிடப்படும் எய்ட்ஸ் நோயாளிகள் - சுகாதாரத்துறையில் இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலம் என்பதெல்லாம் பொய்யா?

எயிட்ஸ் விழிப்புணர்வில் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருந்தது தமிழகம். அதெல்லாம் பழைய கதை. ஆன்டிரெட்ரோவைரல் மருந்துகள் கிடைக்காமலும், தகுந்த மருத்துவர்களோ, ஆலோசனையோ கிடைக்காமல் ஏராளமான எய்ட்ஸ் நோயாளிகள் தடுமாறுவதாக செய்திகள் வெளியாகியிருகின்றன.

எய்ட்ஸ் நோயின் பாதிப்பைக் குறைக்கவும், அவர்களை இயல்பான மனிதர்களாக சமூகத்தில் நடமாட வைப்பதிலும் ஏ.ஆர்.டி என்னும் Anti Retroviral Therapy முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழகம் முழுவதும் 17 இடங்களில் ஏ.ஆர்.டி சென்டர்கள் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றின் நோக்கம், எய்ட்ஸ் நோயின் தாக்கத்தை குறைப்பதாகும்.

தாயிடம் இருந்து குழந்தைகளுக்கு பரவும் எச்.ஐ.வி வைரஸின் ஆபத்தை குறைக்கும் அண்டிரெட்ரோவைரல் (antiretroviral) மருந்துகள் சம்பந்தப்பட்ட ஏ.ஆர்.டி சென்டரில் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், இவற்றில் பெரும்பாலான மையங்களில் தகுந்த மருத்துவர்களோ, ஆலோசகர்களோ இல்லையென்று கூறப்படுகிறது.

ராசிபுரம், பழனி, ஜெயங்கொண்டம், தென்காசி, மணப்பாறை உள்ளிட்ட ஏ.ஆர்.டி மையங்களில் மருத்துவர்களே இல்லை என்கிறார்கள். சென்னை போன்ற நகரங்களில் குறிப்பாக கீழ்ப்பாக்கம், செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் ஒரே ஒரு மருத்துவரை கொண்டு மையம் இயங்கி வருகிறது. பெரும்பாலான மையங்களில் ஒதுக்கப்பட்ட பணியிடங்களில் பாதி இடம் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது.

மன நல ஆலோசகர்கள், மருந்தாளர்கள், நர்ஸ் போன்ற பணியிடங்களிலும் ஆட்கள் இல்லை. சில இடங்களில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி கூட இல்லாத நிலை நீடிக்கிறது. எய்ட்ஸ் நோயாளிகள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை டெஸ்ட எடுக்க வேண்டுமென்றால் ஏ.ஆர்.டி மையங்களை நம்பியிருக்க முடியாது. சென்னை போன்ற நகரங்களை நோக்கித்தான் வரவேண்டியிருக்கிறது.

ஏ.ஆர்.டி மையங்களில் மருந்துகளும் கிடைப்பதில்லை என்று நோயாளிகள் புகார் தெரிவிக்கிறார்கள். பெற்றோர்கள் மூலமாக எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு 2000 முதல் 5000 வரையிலான உதவித் தொகை பல இடங்களில் கிடைப்பதில்லை என்கிறார்கள். தமிழ்நாடு முழுவதுள்ள எய்ட்ஸ் நோயாளிகளுக்கு மருத்துவ செலவாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கவேண்டும் என்கிற கோரிக்கை விடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மருத்துவ கட்டுமானம் வலுவாக இருப்பதாக தேசிய அளவில் நல்ல பெயர் உண்டு. ஆனாலும், மதுரையில் எய்ம்எஸ் வருவற்காக காத்திருக்கிறோம். போலியோ முதல் எய்ட்ஸ் வரையிலான விழிப்புணர்வு அதிகம் என்கிறார்கள். நீட் தேர்வு குறித்து தினமும் பேசப்படுவதால் மருத்துவராகும் கனவில் நடமாடும் மாணவ்ர்களும் அதிகம். ஆனாலும், கள நிலவரமோ நமக்கு வேறு விதமான உலகத்தை காட்டுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com