

பொதுவாகப் புற்றுநோய்க்கு அளிக்கப்படும் கீமோதெரபி (Chemotherapy), புற்றுநோய் செல்களை மட்டுமல்லாமல், உடலின் ஆரோக்கியமான செல்களையும் அழித்துவிடும் தன்மை கொண்டது. இதுவே சிகிச்சையின்போது ஏற்படும் பக்கவிளைவுகளுக்கும் சோர்வுக்கும் காரணம்.
ஆனால், அபுதாபி ஸ்டெம் செல் மையம் (ADSCC) இப்போது ஒரு மகத்தான மருத்துவச் சாதனையை நிகழ்த்தியுள்ளது. இது கீமோதெரபிக்கே ஒரு வலிமையான மாற்று வழியைத் திறந்துவிடலாம் என்று நம்பப்படுகிறது.
நோயாளிக்கேற்ற தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சை (Personalised Medicine) என்று அறியப்படும் இந்த அதிநவீன முறை: TIL (Tumour-Infiltrating Lymphocytes) தெரபி.
ஐக்கிய அரபு அமீரகத்திலேயே முதன்முறையாக, ADSCC விஞ்ஞானிகள் மார்பக மற்றும் நுரையீரல் புற்றுநோய்க் கட்டிகளுக்குள் இயற்கையாக ஊடுருவியிருக்கும் நோய் எதிர்ப்பு செல்களை (TILs) வெற்றிகரமாகப் பிரித்தெடுத்துள்ளனர்.
இந்தச் செல்களைக் கொண்டு நோயாளியின் புற்றுநோயை நேரடியாகத் தாக்கும் சிகிச்சையைத் தொடங்குவதே இவர்களின் இலக்கு.
TIL தெரபி: அது எப்படி வேலை செய்கிறது?
TIL தெரபியின் அடிப்படை மிக எளிமையானது ஆனால் வலிமையானது: உங்களுடைய உடல், உங்களது நோயை எதிர்த்துப் போராடக் கற்றுக்கொடுப்பது!
ஆயுதம் தயாரித்தல்: புற்றுநோய்க் கட்டியின் உள்ளே இருக்கும் நோய் எதிர்ப்பு செல்கள் (T cells) பிரித்தெடுக்கப்படுகின்றன. இந்தச் செல்களுக்கு ஏற்கனவே, புற்றுநோய் செல்களை அடையாளம் காணும் திறன் தெரியும்.
படையை பெருக்குதல்: பிரித்தெடுக்கப்பட்ட இந்த 'T செல்கள்', ஆய்வகத்தில் வைத்துப் பல்கிப் பெருகச் செய்யப்படுகின்றன. அவை கோடிக்கணக்கான தற்காப்புப் படைகளாக (Living Therapy) மாற்றப்படுகின்றன.
போருக்கு அனுப்புதல்: இந்த வலிமைப்படுத்தப்பட்ட படைகள் மீண்டும் நோயாளியின் உடலுக்குள் செலுத்தப்படும்.
நேரடித் தாக்குதல்: இந்தச் செல்கள், கீமோவைப் போல ஆரோக்கியமான செல்களைத் தாக்காமல், தங்களுக்கு ஏற்கெனவே தெரியும் புற்றுநோய் செல்களை மட்டுமே தேடிச் சென்று அழிக்கும்.
ADSCC விஞ்ஞானி டாக்டர் ஸைமா மஸோரா ஹெரெரா கூறுவது போல், "சிகிச்சை பலனளிக்காத நிலையில், 'எல்லா வழியும் அடைபட்டுவிட்டது' என்று சொல்லும் நோயாளிகளுக்கு, இந்த TIL தெரபி ஒரு 'புதிய தாக்குதல் பாதை' ஆகும்."
யாருக்கெல்லாம் நம்பிக்கை?
இந்தச் சிகிச்சை மெலனோமா (தோல் புற்றுநோய்) சிகிச்சையில் ஏற்கனவே உறுதியளிக்கும் முடிவுகளைக் காட்டியுள்ளது.
ADSCC-யின் இந்தச் சாதனையால், நுரையீரல், கர்ப்பப்பை, தலை மற்றும் கழுத்துப் புற்றுநோய்கள் போன்ற சிகிச்சைக்குக் கடினமான திடக் கட்டிகள் (Advanced Solid Tumors) கொண்ட நோயாளிகளுக்கும் நம்பிக்கை பிறந்துள்ளது.
இந்த ஆய்வு, உள்நாட்டிலேயே இந்தச் சிகிச்சையை வழங்குவதோடு மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள அறிவியல் சமூகத்திற்கு அரிய ஆராய்ச்சித் தரவுகளையும் வழங்குகிறது என்று ADSCC-யின் தலைமைச் செயல் அதிகாரி பேராசிரியர் யெண்ட்ரி வென்ச்சுரா தெரிவித்துள்ளார்.
இதனால் நோயாளிகள் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல வேண்டிய தேவையும் குறைகிறது.
சர்க்கரை நோய் ஆராய்ச்சியில் அடுத்த பாய்ச்சல்
ADSCC-யின் பணி புற்றுநோயுடன் நிற்கவில்லை. அவர்கள் ஜப்பானில் உள்ள கியோட்டோ பல்கலைக்கழகத்துடன் இணைந்து, டைப் 1 நீரிழிவு நோய்க்கும் (Type 1 diabetes) சிகிச்சை அளிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
நோக்கம்: ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி, அழிந்துபோன கணையத்தையே (Pancreas) மீளுருவாக்கம் (Regenerate) செய்வதே இந்த ஆய்வின் மிக முக்கியமான இலக்கு.
பேராசிரியர் வென்ச்சுரா, இது வெறும் ஸ்டெம் செல் சிகிச்சை அல்ல. கணையத்தை முழுவதுமாகச் சீரமைக்கும் அணுகுமுறை.
அடுத்த ஓரிரு வருடங்களில் நீரிழிவு நோயாளிகளுக்கு உறுதியான சிகிச்சை அளிக்க முடியும் என நாங்கள் நம்புகிறோம்,என்று கூறியுள்ளார்.
ADSCC-யின் இந்த முயற்சிகள், பொதுமக்களுக்கான சுகாதாரச் சேவையின் தரத்தை, உலகிலேயே மிக உயரிய நிலைக்குக் கொண்டு செல்வதில் முக்கியப் பங்காற்றுகிறது.
