நீண்ட தூர ரயில் பயணங்களின்போது, படுக்கை வசதியுடன் கூடிய 3 அடுக்கு ஏசி பெட்டிகளில் அதிகளவு பயணிகள் செல்வது வழக்கம். இப்போது இந்த பொருளாதார வகுப்பு (3- இ) பெட்டிகளை நீக்க, ரயில்வே முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.
நீண்ட தூர ரயிலில் பயணிகள் மலிவு விலையில் பயணம் செய்ய வசதி அளிக்கும் வகையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஏசி பொருளாதார பெட்டிகள்(3- இ) அறிமுகம் செய்யப்பட்டது. இதில் ரயில் கட்டணங்கள் 6 முதல் 8 சதவீதம் வரையில் குறைவாக வசூலிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஏசி 3- இ பெட்டிகளை ரத்து செய்ய ரயில்வே முடிவு எடுத்துள்ளது.
இதுகுறித்து ரயில்வேத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது;
ரயில்களில் ஏசி 3- இ வகுப்புகளை நீக்கிவிட்டு, அவை ஏசி 3 அடுக்கு வகுப்புகளுடன் இணைக்கப்படும். இந்த பணி 4 மாதங்களில் முடிக்கப்படும். தற்போது 463 ரயில்களில் ஏசி 3- இ பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. மற்றபடி 11,277 ரயில்களில் ஏசி 3-ம் வகுப்பு பெட்டிகள் உள்ளன என்று தெரிவித்தனர்.