ஏற்காடு! சுற்றுலாவில் ஏற்படும் விபரீத மரணங்கள்...

ஏற்காடு! சுற்றுலாவில் ஏற்படும் விபரீத மரணங்கள்...

வ்வளவு எச்சரிக்கைகள் விழிப்புணர்வுகள் இருந்தாலும் இது போன்ற பரிதாப மரணங்களைக் காணும்போது மனதில் வேதனை எழுவதை தவிர்க்க முடியவில்லை. கோடை விடுமுறையின் சந்தோசத் தருணங்கள் வாழ்வின் அழிக்கமுடியாத மரண வடுக்களைத் தந்து செல்வது கவனமின்மை என்பதா விதி என்பதா? வயதுப் பிள்ளைகளின் பிடிவாத குணம் அவர்களுக்கு மட்டுமல்ல பெற்றோருக்கும் அவர்களை சுற்றி இருக்கும் உறவுகளுக்கும் தீராத வேதனையைத் தரும் என்பதை உணர்த்தும் சோக செய்திதான் இது.

       சென்னையை சேர்ந்த தந்தையும் மகளும் குடும்பத்துடன்  சேலம் ஏற்காடு மலைக்கு சுற்றுலா வந்த இடத்தில நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

     சென்னை மந்தவெளி பகுதியைச் சேர்ந்தவர் பாலமுரளி. வயது 43. .ஐ.டி கம்பெனி ஊழியர். இவரது மனைவி சந்தரலட்சுமி வயது 41 இவர்களுக்கு சௌமியா (13) சாய் சுவேதா(3) என்ற மகள்கள் உள்ளனர். சென்னையில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்த சௌமியாவிற்கு தேர்வு முடிந்து விடுமுறை என்பதால்  விடுமுறையைக் கொண்டாட மனைவி மகள்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை பாலமுரளி ஏற்காட்டிற்கு வந்துள்ளனர். அங்குள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்த அவர்கள் ஏற்காட்டில் உள்ள பல்வேறு இடங்களை சுற்றி பார்த்துவிட்டு நேற்று மதியம் ஏற்காட்டில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நல்லூர் அருவிக்கு குடும்பத்துடன் சென்றுள்ளனர்.

       அந்த நீர்வீழ்ச்சியில் குடும்பத்துடன் பாலமுரளி உற்சாகமாக குளித்து மகிழ்ந்தார். அருவியில் மகள் சௌமியாவுடன் குளித்து கொண்டிருந்தபோது சௌமியா பாறை மீது ஏறி உள்ளார். அப்போது உடை மாற்றும் அறை கட்டுவதற்காக நீர்வீழ்ச்சி அருகே 30 அடி உயர பாறையில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு இருந்தன. அதில் சௌமியா ஏற அதைப் பார்த்த பாலமுரளி அங்கு செல்லாதே என எச்சரித்தவாறே அவரும் அந்தப் பாறையில் ஏறி மகளின் பின்னால் சென்றுள்ளார்.

       பாறையின் உச்சிப்பகுதிக்கு சென்ற சிறுமி அங்கிருந்து எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழ அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாலமுரளியும் மகளைக் காப்பாற்ற சென்று அவரும் பாறையில் இருந்து தவறி கீழே விழுந்தார். இருவரும் பாறையில் இருந்து உருண்டபடி கீழே உள்ள அருவியின் நீர் விழும் பகுதிக்கு விழுந்துள்ளனர். அப்போது அங்கு குளித்துக்கொண்டிருந்த சிலர் அலறியபடி அவர்களைக் காப்பாற்ற முயன்றனர்.

      இருவரையும் நீரிலிருந்து வெளியே இழுத்து மீட்டனர். ஆனால் அவர்கள் இருவரது தலையிலும் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தது தெரியவந்தது. கண்ணெதிரே  கணவரும் மகளும் இறந்த அதிர்ச்சியில் பாலமுரளியின் மனைவி சந்திரலெட்சுமி கதறி அழுதது அங்கிருந்த அனைவரையும் கலங்க வைத்தது.

       தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஏற்காடு காவலர்கள் பலியான தந்தை மகளின் உடல்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக் காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.

       இதுகுறித்து ஏற்காட்டைச் சேர்ந்த ஒருவர் கூறும்போது “ஆறு மாதங்களுக்கு முன்பு ஏற்கனவே ஒரு சுற்றுலா பயணி தவறி விழுந்து இறந்த நிலையில் மீண்டும் ஒரு கோர சம்பவம். இந்த நல்லூர் நீர்வீழ்ச்சி எங்களைப் போன்ற உள்ளூர் வாசிகளுக்கு மட்டுமே தெரிந்த ஒரு இடம். சமீப காலங்களில் ஒரு சில வருடங்களாகத்தான் இங்கு சுற்றுலா பயணிகள் சென்று வருகிறார்கள். இப்போது வாகனங்களில் ஏற்காடு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் இங்கு செல்வது வாடிக்கையாகி விட்டது.

இது ஏற்காட்டில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் எந்த பாதுகாப்பும்,  பாதுகாவலர்களும்,  இல்லாத ஆள் ஆரவாரமற்ற சூழ்நிலையில் இருப்பதால் மிகவும் ஆபத்தான இடம். சறுக்கி விழுந்தால் குறைந்தது நூறு அடி பள்ளத்தில் போய் விழ நேரிடும். அவ்வளவு ஆபத்தான இடம் இது.  பாறைகளில் பாசி படர்ந்து இருப்பதால் வழுக்கி விடும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் மிகவும் ஆபத்து. ஏற்காடு வரும் சுற்றுலா பயணிகள் தயவுசெய்து இங்கு செல்வதை தவிர்ப்பது நல்லது என்கின்றனர் உள்ளூர்வாசிகள்.

      ஆர்வக்கோளாறில் பிள்ளைகளின் விருப்பத்திற்காக வலியச் சென்று ஆபத்தில் மாட்டுவதைத் தவிர்ப்பதில் சுற்றுலாவாசிகள் எச்சரிக்கையுடன் செயல்பட்டால் இம்மாதிரி சம்பவங்களைத் தவிர்த்து சுற்றுலாவை இனிமையாக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com