மதுரவாயல் அருகே லாரி மோதியதில் 22 வயதே ஆன சாஃப்ட்வேர் இஞ்சினியர் ஷோபனா அவரது தம்பி கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மதுரவாயல் பகுதியில் மோசமான சாலைப் பள்ளங்களால் பொது மக்கள் அவதியடைவதாகவும், அடிக்கடி விபத்துகள் நடப்பதாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இந்த நிலையில் அப்பகுதியிலுள்ள சாலையை சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
போரூரை சேர்ந்த 22 வயதான ஷோபனா கூடுவாஞ்சேரியிலுள்ள தனியார் நிறுவனமான Zoho -வில் சாப்ட்வேர் எஞ்சினீயராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் 12ம் வகுப்பு படிக்கும் தனது தம்பியை திருவேற்காட்டிலுள்ள பள்ளியில் விடுவதற்காக நேற்று இரு சக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு சென்றுள்ளார்.
தாம்பரம் பைபாஸ் சர்வீஸ் சாலையில் மதுரவாயல் அருகே சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார். அந்த சமயத்தில் பின்னால் மணல் ஏற்றி வந்த லாரி ஒன்று ஷோபனா மீது ஏறி இறங்கியது. கண் முடி திறக்கும் முன்பு நடந்த இந்த கொடிய விபத்தில் ஷோபனா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதிஷ்டவசமாக அவரது தம்பி உயிர் தப்பினார்.
பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் விபத்து குறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஷோபனாவின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தார். பள்ளிக்கு தாமதமாகி விட்டது என்பதற்காக தம்பியை அழைத்துச் சென்ற பொறியாளர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக Zoho நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு, “எங்கள் பொறியாளர்களில் ஒருவரான ஷோபனா இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது சென்னை மதுரவாயல் அருகே குண்டும் குழியுமான சாலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். நமது மோசமான சாலையால் ஷோபனாவை அவரது குடும்பமும் Zoho நிறுவனமும் இழந்து விட்டது” என்று ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.