#BREAKING : TNPSC தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அதிரடி மாற்றம் - தமிழக அரசு அதிரடி!

TNPSC
TNPSC
Published on

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) கடந்த செப்டம்பர் மாதம் நடத்திய குரூப்-2 மற்றும் 2A முதல்நிலைத் தேர்வு முடிவுகளின் அடிப்படையில், முதன்மைத் தேர்விற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. மொத்தம் உள்ள 828 காலிப் பணியிடங்களுக்கு, சுமார் 10,500-க்கும் மேற்பட்ட தேர்வர்கள் (குரூப்-2: 1,126 பேர், குரூப்-2A: 9,457 பேர்) தகுதி பெற்றிருந்தனர். இவர்களுக்கான முக்கியக் கட்டமான முதன்மைத் தேர்வு பிப்ரவரி 8-ஆம் தேதியான இன்று நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்தது.

இதற்காகத் தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. குறிப்பாகத் தலைநகர் சென்னையில் மட்டும் நந்தனம் அரசு கலைக்கல்லூரி, மாநிலக் கல்லூரி, அரும்பாக்கம் டிஜி வைஷ்ணவா கல்லூரி உள்ளிட்ட 7 மையங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தன. இதில் நந்தனம் மற்றும் மாநிலக் கல்லூரிகளில் 1,800 தேர்வர்களும், அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரியில் 600 தேர்வர்களும் தேர்வு எழுத விரிவான வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

இருப்பினும், இன்று காலை தேர்வு தொடங்கவிருந்த நிலையில், தேர்வர்களின் ஹால் டிக்கெட்டில் (நுழைவுச் சீட்டு) முகவரி மற்றும் மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் பெரும் குளறுபடிகள் ஏற்பட்டன. ஒரே முகவரியில் அதிகப்படியான தேர்வர்கள் திரண்டதும், மையங்களுக்கு இடையே தேர்வர்கள் அலைக்கழிக்கப்பட்டதும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

அதாவது, ஹால் டிக்கெட்டில் டிஜி வைஷ்ணவா கல்லூரி முகவரி இடம் பெற்றிருந்ததால், அனைவரும் அங்கு சென்றனர். ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் வருவதை பார்த்த கல்லூரி நிர்வாகம், சந்தேகத்தில் ஹால் டிக்கெட்டை வாங்கிப் பார்த்தது. ஆனால், அதில் டிஜி வைஷ்ணவா கல்லூரி முகவரியே இருந்துள்ளது. இதனால், குழப்பம் ஏற்பட்டது.

அப்போது, ஹால் டிக்கெட்டுகளில் நந்தனம் கல்லூரியில் தேர்வு எழுத வேண்டிய மாணவர்களுக்கான முகவரி டிஜி வைஷ்ணவா என இடம்பெற்று இருப்பது இன்று காலையில் தெரியவந்தது. இதனால், அனைவரையும் சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இப்படி கடைசி நேரத்தில் கூறினால் எப்படி செல்ல முடியும்? என தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், தமிழ்நாடு முழுவதும் நடக்கவிருந்த குரூப்-2 தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்ந்து அரும்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தேர்வர்களுடன் டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று மாநிலம் முழுவதும் குரூப்-2 மற்றும் 2ஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார். வரும் 22 ஆம் தேதி குரூப் 2 பதவிகளுக்கான பாடத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக வெங்கடப்பிரியா ஐஏஎஸ் நியமிக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com