சென்னை மாநகரத்தை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் உள்ள 78 சார்பதிவாளர்களையும் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. நிர்வாக காரணங்களுக்காக கூண்டோடு மாற்றம் செய்வதாக சொல்லப்பட்டாலும் சார்பதிவு அலுவலகங்களில் தொடர்ந்து வரும் அதிரடி சோதனைகளுக்கு மத்தியில் அரசு எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை மண்டலத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர்களையும் கூண்டோடு மாற்றம் செய்வதாக நேற்றிரவு தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக அரசுத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அரசாணையில் நிர்வாக காரணங்களுக்காக இடமாற்றம் செய்யப்படுவதாக அரசு தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அனைத்து மாவட்ட பதிவாளர்களும் மாற்றப்பட்ட நிலையில் இம்முறை சார்பதிவாளர்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள்.
இதற்கிடையே தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். லஞ்ச ஊழல் தடுப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை செய்வதுண்டு. ஆனால், வருமான வரித்துறை சோதனை மேற்கொள்வதுதான் ஆச்சர்யம். வழக்கமாக நடைபெறும் சோதனைதான் என்று சார்பதிவாளர்கள் அலுவலகத்தில் மறுத்தாலும் தமிழகம் முழுவதும் வருமான வரித்துறை ஆணையம் விரிவாக சோதனை மேற்கொள்வது இதுதான் முதல் முறை.
கொரான தொற்றுப்பரவல் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக சோதனைகள் நடத்தப்படவில்லை. தற்போது வழக்கமான சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் பத்திரப்பதிவில் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என்பதை ஆய்வு செய்யவும் சோதனை நடைபெறுவதாக ஏகப்பட்ட விளக்கங்கள் தரப்படுகின்றன.
வருமான வரி ஆணையத்தின் சோதனைகள் தொடர்வதும், சார்பதிவாளர்கள் அதிரடியாக மாற்றப்படுவதும் வேறு ஏதோ சிக்கல்களில் பத்திரப் பதிவுத்துறை சிக்கியிருப்பதாக உணர முடிகிறது என்கிறார்கள். தமிழ்நாட்டில் பத்திரப் பதிவுத்துறையின் கீழ் ஏறக்குறைய 600 சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆவண எழுத்தர்கள் மற்றும் இடைத்தரகர்களின் அத்துமீறல் அனைத்து அலுவலகங்களிலும் இருந்து வருகிறது.
பத்திரப் பதிவு அலுவலகங்களுக்கு வரும் அனைவரையும் காமிராவில் பதிவு செய்யவேண்டும். பத்திரப் பதிவு, காமிரா முன்னிலையில் மட்டுமே நடைபெறவேண்டும். ஆவணம் எழுதுபவர்கள் அலுவலகத்திற்குள் நுழையக்கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகள் கடந்த பத்தாண்டுகளாகவே இருந்து வருகின்றன.
ஆனாலும், பத்திரப் பதிவு அலுவலகங்களில் மிகப்பெரிய அளவில் லஞ்சம், விதிமீறல்கள் தொடர்ந்து இருந்து வருகின்றன.