
சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவோம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோயிலின் ஆனி திருமஞ்சன திருவிழா இன்று நடைபெறுகிறது. இதற்காக ஜூன் 24ஆம் தேதி 4 நாட்களுக்கு கனகசபை மீது ஏற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தீட்சிதர்கள் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, நேற்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், தீட்சிதர்களுடன் பேச்சுவார்த்தை நட்த்தினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் இந்து சமய அறநிலையத்துறை ஊழியர் ஒருவர், கோயில் விதிப்படி மேலாடையை கழற்றிவிட்டு கனகசபை படிக்கட்டுகளில் ஏறி அங்கு வைக்கப்பட்டிருந்த பதாகையை அகற்றினர். எனினும் பக்தர்கள் கனகசபை மீது ஏற தீட்சிதர்கள் அனுமதியளிக்கவில்லை.
தொடர்ந்து 4வது நாளாக இன்றும் பக்தர்கள் தரிசனத்திற்கான தடை அமலில் உள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் அதிகார மையத்தை ஏற்படுத்திக் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். கோயிலை தங்களது சொந்த நிறுவனம் போல் பாவித்து வருகின்றனர். அதை அரசு தட்டிக் கேட்கிறது என்று தெரிவித்தார். நடராஜர் கோயிலில் உண்டியல் இல்லை எனவும், வைப்பு நிதி, நகை போன்றவை எவ்வளவு உள்ளது போன்ற எந்த தகவலும் தெரிவிக்கவில்லை எனவும் அமைச்சர் சேகர்பாபு கூறினார். மேலும், பொதுமக்கள், பக்தர்களின் எண்ணப்படி சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான அனைத்து ஆதாரங்களையும் திரட்டி வருகிறோம் எனவும் அதற்கான பணிகள் படிப்படியாக நடைபெற்றுவருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.