சிறுவர்கள் பைக் ஓட்டினால் வாகன உரிமையாளர் மீது நடவடிக்கை... வட்டாரப் போக்குவரத்து துறை எச்சரிக்கை.

சிறுவர்கள் பைக் ஓட்டினால் வாகன உரிமையாளர் மீது நடவடிக்கை... வட்டாரப் போக்குவரத்து துறை எச்சரிக்கை.

சாலைகளில் செல்லும்போது ஒரு சிறுவனோ சிறுமியோ இரு சக்கர வாகனத்தில் பறந்து செல்வதை நாம் நிச்சயம் காண முடியும். ‘இவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. இவர்களிடம் வண்டிகளைத் தருபவர்கள் முதலில் திருந்த வேண்டும்’ என்று முணுமுணுத்துக் கொண்டே பத்திரமாக அவர்கள் வீடு திரும்ப வேண்டி கடந்து செல்வோம். இனி வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளின் எச்சரிக்கையை நினைவில் வைத்தால் இப்படி தங்கள் பிள்ளைகளிடம் வண்டிகளைத் தரும் பெற்றோருக்கு மட்டுமல்ல அவர்கள் தரும் வண்டியால் விபத்தில் மாட்டிக்கொள்ளும் அப்பாவி களுக்கும் நல்லது. இனி செய்தி.

  சிறுவர்கள் வாகனத்தை ஓட்டி சென்றால் வாகன உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என்று வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பள்ளியில் படிக்கும் போதே  சிறுவர்களுக்கு பைக் ஓட்டும் ஆசை வந்துவிடுகிறது. காரணம் அவர்களின் பெற்றோர். பிள்ளை வளர்ந்து விட்டான் எனும் பெருமிதத்தில் அவர் களின் வயதை எண்ணாமல் தங்களது பைக் மற்றும் மோட்டார் சைக்கிளை கொடுத்து ஊக்குவிக்கிறார்கள். இந்த முறையற்ற அடுத்தவருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயல் குறித்தான புகார்கள் அவ்வப்போது எழுந்த வண்ணமே உள்ளன. 

     இந்த சிறுவர்கள் வாகனத்தை ஓட்டி செல்லும் போது விபத்தில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது. மேலும் விபத்தையும் ஏற்படுத்தி விடுகின்றனர். சிறுவர்களிடம் வாகனங்களை ஓட்டுவதை தவிர்ப்பது தொடர்பாக போக்குவரத்து அதிகாரிகளும் போலீசாரும் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில் சிறுவர்களுக்கு வாகனத்தை ஓட்டத் தரும் வாகனத்தின் உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவாகியுள்ளது. இது தொடர்பாக வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது; 

    “மோட்டார் வாகன சட்டப்படி 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மட்டுமே கியர் மோட்டார் சைக்கிள் மற்றும் இலகு ரக வாகனங்களை இயக்க ஓட்டுநர் உரிமம் பெற முடியும். 16 வயது பூர்த்தி அடைந்தவர்கள் 50 சிசிக்கு குறைவான கியர் இல்லாத இருசக்கர வாகனங்களை மட்டுமே இயக்கத் தகுதியுடையவர்கள். தற்போதைய சூழ்நிலையில் ஓட்டுநர் உரிமம் பெறத் தகுதியற்ற இளம் வயதினர் இருசக்கர வாகனங்களை இயக்கும்போது விபரீதங்கள் ஏற்படுகின்றன. பெற்றோர் தன்னைவிட தங்கள் குழந்தைகள் இருசக்கர வாகனத்தை நன்றாக இயக்குவதாக நினைக்கின்றனர் .இது மோட்டார் வாகன சட்டப்படி குற்றமாகும்.

      துள்ளித் திரியும் பருவத்தில் சிறகடித்துப் பறக்க வேண்டும் என்ற எண்ணமே இளம் வயதினர் மனதில் அதிகம் இருக்கும். அந்த வகையில் வேகமாக செயல்படும் போது கிடைக்கும் சிலிர்ப்பு உணர்வுகளை மழுங்கடித்து எளிதாக ஆபத்தில் சிக்க வைக்கிறது. இதனால் இளம் வயதிலேயே தங்கள் எதிர்காலத்தை இழக்கும் அபாய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இளம் வயதினரால் விபத்துகளோ வேறு குற்றங்களோ ஏற்படும்போது அவர்களுடைய பெற்றோரோ அல்லது பாதுகாப்பாளரோ அதற்கான பொறுப்பை ஏற்று தண்டனை பெறக்கூடிய விதிமுறைகள் உள்ளன. பெற்றோருக்கோ அல்லது வாகன உரிமையாளருக்கோ ரூபாய் 25 ஆயிரம் அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை நீதிமன்றத்தால் வழங்க வாய்ப்பு உண்டு. இளம் வயதினரால் ஏற்பட்ட குற்றத்தில் தொடர்புடைய வாகனத்தின் பதிவு சான்று பன்னிரண்டு மாதங்கள் வரை ரத்து நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டி இருக்கும். தொடர்ச்சியாக போக்குவரத்து தொடர்பான குற்றத்தில் ஈடுபட்ட இளம் வயதினருக்கு மோட்டார் வாகன சட்டப்படி 25 வயது முடியும் வரை பழகுனர் உரிமமோ ஓட்டுனர் உரிமமோ பெற முடியாமல் தடை செய்யப் பட்டுள்ளது. பெற்றோர்களோ அல்லது வாகன உரிமையாளர்களோ இளம் வயதினருக்கு வாகனத்தை இயக்க கொடுக்காமல் கவனமாக செயல்பட்டு தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாத்து தாங்களும் குற்றம் நடவடிக்கைகள் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.”

       அதிகாரிகளின் இந்த எச்சரிக்கையை மனதில் கொள்ளாமல் சிறார்கள் கைகளில் வண்டியைத் தந்து மகிழ்பவர்கள் அதனால் என்றாவது வேதனையை சந்திப்பது நிச்சயம். அதற்கு முன் விழிப்புணர்வுடன் இருப்பது பிள்ளைகளுக்கும் நாட்டுக்கும் நல்லது. யோசிப்போமா? 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com