‘மாநகராட்சி மயானங்களில் பணம் வசூலித்தால் நடவடிக்கை’ சென்னை மேயர் எச்சரிக்கை!

‘மாநகராட்சி மயானங்களில் பணம் வசூலித்தால் நடவடிக்கை’ சென்னை மேயர் எச்சரிக்கை!

மே மாதத்துக்கான சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் இன்று மேயர் பிரியா தலைமையில் கூடியது. சென்னை மாநகராட்சியின் ஆணையாளராக ராதாகிருஷ்ணன் பதவி ஏற்ற பிறகு கூடும் முதல் மாமன்றக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாமன்றக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கு சென்னை மேயர், துணை மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

இந்தக் கூட்டத்தில் மொத்தம் 66 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமாக அடையார் மண்டலம், 173வது வார்டில் உள்ள காந்தி நகர் கால்வாய் கரை சாலையில் புதிதாக அமைய உள்ள பூங்காவுக்கு, ‘கலைஞர் மு.கருணாநிதி பூங்கா’ என்று பெயர் வைப்பதற்கு சென்னை மாமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

பட்ஜெட்டில் அறிவித்தபடி சென்னை பள்ளிகளில் உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்வி பயிலும் மாணவர்களை நான்கு குழுக்களாகப் பிரித்து, நான்கு வண்ண டிசர்ட் கொள்முதல் செய்வதற்கு 62 லட்ச ரூபாய் ஒதுக்க மாமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. அடுத்து, பட்ஜெட்டில் அறிவித்தபடி சென்னை மாநகராட்சி பள்ளிகளில் இசை ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளுக்கு வயலின், ட்ரம் செட் உள்ளிட்ட பத்து இசைக் கருவிகள் வாங்க 4.99 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்ய இந்த மன்றம் அனுமதி வழங்குகிறது.

ரிப்பன் மாளிகையின் ஒலிபெருக்கி அமைப்பை மேம்படுத்தி புதிய டிஜிட்டல் முறையில் ஒலிபெருக்கியை அமைக்க டெலிகேட் கலந்தாய்வு மைக்குகள், சேர்மன் மைக்குகள், அதனை சார்ந்த கட்டுப்பாட்டுக் கருவிகள், மென்பொருள் மற்றும் சர்வர்களை நிறுவுதல், சோதனை செய்தல் மற்றும் இயக்கி வைக்கும் பணிகளுக்காக 3.43 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கு அனுமதி வழங்கியது போன்ற தீர்மானங்கள் மாமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.

அதையடுத்து, கேள்வி நேரத்தில் பேசிய மாமன்ற உறுப்பினர்கள் சிலர், ‘மாநகராட்சியின் தகனம் மற்றும் இடுகாட்டில் பொதுமக்களிடம் பணம் வசூலிக்கப்படுவதாகப் புகார் கூறினர். அவர்களுக்கு பதிலளித்த மேயர் பிரியா, அனைத்து மின் மயானங்கள் மற்றும் இடுகாட்டிலும் புகார் எண் மற்றும் கட்டணமில்லா சேவை குறித்து அறிவிப்புப் பலகை வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதுமட்டுமின்றி, மாநகராட்சி மின் மயானங்களில் பொது மக்களிடம் கட்டணம் வசூலித்தால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேயர் பிரியா எச்சரிக்கை செய்து இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com