நடிகர் பிரபுவுக்கு திடீரென நடந்த அறுவை சிகிச்சை! இப்போது எப்படி இருக்கிறார்! மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை!
நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அறுவை சிகிச்சை நடந்துள்ளதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள தகவல், திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்பாவைப் போல் பிள்ளை என பேர் எடுத்தவர் நடிகர் பிரபு. மாபெரும் நடிகரான சிவாஜி கணேசனின் மகன் என்பதையும் தாண்டி, 1982 முதல் நடித்து வரும் நடிகர் பிரபு, தனது நடிப்பாற்றலால் 'சின்ன தம்பி', 'கன்னிராசி', 'அக்னி நட்சத்திரம்', 'அரங்கேற்றவேளை', 'வெற்றி விழா' என பல்வேறு ஹிட் படங்களைக் கொடுத்ததோடு தற்போதும் கதைக்கு வலு சேர்க்கும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
அந்த வகையில், மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' படத்திலும் பிரபு நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிகர் பிரபு திடீரென உடல்நிலை சரியில்லாமல் மெட்வே மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து, தற்போது மெட்வே மருத்துவமனை, நடிகர் பிரபு உடல்நலன் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், "சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மெட்வே மருத்துவமனையில் நடிகர் பிரபு, நேற்று முன்தினம் இரவு சிறுநீரகப் பிரச்சினை காரணமாக அனுமதிக்கப்பட்டதாகவும், சிறுநீரகத்தில் கல் அடைப்பு இருப்பது தற்போது கண்டறியப்பட்டு, இன்று காலை அவருக்கு யூரித்ரோஸ்கோப்பி லேசர் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரக கற்கள் அகற்றப்பட்டன என்றும், தற்போது நடிகர் பிரபு பூரண உடல் நலத்துடன் இருப்பதாகவும், சிகிச்சைக்குப் பிந்தைய பொதுவான மருத்துவ சோதனைகளுக்குப் பின் ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார் எனவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அவர் உடல்நிலை சீக்கிரமே தேறிவர வேண்டும் என அவரது ரசிகர்கள் விரும்புவதோடு, பிரபலங்கள் பலரும் போனில் தொடர்புகொண்டு அவரது நலனை விசாரித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.