நடிகர் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா தனது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகைகள் திருடப்பட்டதாக புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அவரது புகாரின் அடிப்படையில் தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து இது தொடர்பாக வீட்டில் பணிபுரியும் 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அதில், வைர நகைகள், பழங்கால தங்கத் நகைகள், நவரத்தினம் நகைகள் தங்கத்துடன் கூடிய முழு பழங்கால வைரநகைகள் ஹாரம் , நெக்லஸ் மற்றும் சுமார் 60 சவரன் நகைகள் காணாமல் போனதாக புகாரில் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா தற்போது‘லால் சலாம்’ படத்தை இயக்கி வருகிறார். இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடிக்கிறார் என்பதும் பரபரப்பான செய்தி. ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை திருமணம் செய்து 18 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த மாதம் பிப்ரவரி 10-ம் தேதி லாக்கரைச் சரிபார்த்தபோது, திருமணமான 18 ஆண்டுகளில் குவிந்திருந்த ரூபாய் 3 கோடியே 6 லட்சம் மதிப்பிலான மேற்கூறிய நகைகள் காணாமல் போனதைக் கண்டு பிடித்ததாக ஐஸ்வர்யா கூறினார்.
கடந்த 2019-ம் ஆண்டு தனது தங்கை சௌந்தர்யாவின் திருமணத்திற்கு நகைகளை பயன்படுத்திய பின்னர், நகைகளை லாக்கரில் வைத்திருந்ததாக ஐஸ்வர்யா தனது புகாரில் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 2021 வரை, அது செயின்ட் மேரி சாலையில் உள்ள அவரது குடியிருப்பில் இருந்தது, பின்னர் அது சிஐடி காலனியில் நடிகர் தனுஷுடன் அவர் வாழ்ந்து வந்த குடியிருப்புக்கு மாற்றப்பட்டது. மீண்டும் செப்டம்பர் 2021 இல் செயின்ட் மேரி சாலை அடுக்குமாடி குடியிருப்புக்கு மாற்றப்பட்டது.
ஏப்ரல் 9, 2022 அன்று, லாக்கர் நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் இல்லத்திற்கு மாற்றப்பட்டது. “லாக்கரின் சாவிகள் செயின்ட் மேரிஸ் சாலை குடியிருப்பில் உள்ள எனது தனிப்பட்ட இரும்பு அலமாரியில் வைக்கப்பட்டிருந்தன. இது தனது ஊழியர்களுக்கும் தெரியும். தான் இல்லாத போது அவர்களும் அடிக்கடி அபார்ட்மெண்டிற்கு செல்வார்கள் என தனது புகாரில் ஐஸ்வர்யா குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த சம்பவம் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.