நடிகர் ரோபோ சங்கருக்கு வனத்துறையினர் ரூ 2.50 லட்சம் அபராதம்!

நடிகர் ரோபோ சங்கருக்கு  வனத்துறையினர்  ரூ 2.50 லட்சம் அபராதம்!
Published on

பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கர் அனுமதி இல்லாமல் வளர்த்த கிளிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்து கிண்டியில் இருக்கும் தேசிய சிறுவர் பூங்காவில் விட்டனர். வீட்டில் கிளிகளை வளர்த்ததாக நடிகர் ரோபோ சங்கருக்கு ரூ 2.5 லட்சம் வனத்துறை அபராதம் விதித்துள்ளது.

நடிகரும் காமெடியனுமான ரோபோ ஷங்கர் சாலிகிராமத்தில் இருக்கும் தனது வீட்டில் இரண்டு அலெக்சாண்டரியன் வகை பச்சை கிளிகளை வளர்த்து வந்திருக்கிறார். ஆனால் அதற்குரிய அனுமதியை பெற்றிருக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து அவரது வீட்டுக்கு சென்ற வனத்துறையினர் கிளிகளை கைப்பற்றி கிண்டி தேசிய சிறுவர் பூங்காவில் விட்டனர்.

சென்னை வளசரவாக்கம் வசித்து வருபவர் காமெடி நடிகர் ரோபோ சங்கர். இவர் தனியார் தொலைகாட்சி காமெடி நிகழ்ச்சியில் பங்கேற்று திரை பிரபலங்கள் பலரை போல் மிமிக்ரி செய்து புகழடைந்தார்.

கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது நகைச்சுவையால் பலரையும் கவர்ந்தவர் ரோபோ ஷங்கர். சின்னத்திரையில் ஜொலித்தால் வெள்ளித்திரையிலும் வாய்ப்பு கிடைக்கும் அதனால் திரைப்படங்களிலும் அறிமுகமானார் ரோபோ ஷங்கர்.

இவர் அண்மையில் தனது வீட்டில் வளர்க்கும் கிளிகள் குறித்து யூடியூப் வீடியோவில் கூறியிருந்தார். அந்த கிளிகள் அலெக்சாண்ட்ரியன் கிளிகள் ஆகும். இதை வனத்துறையின் அனுமதி இல்லாமல் வளர்க்கக் கூடாது என தெரிகிறது. இந்த நிலையில் ரோபோ சங்கர் வெளியிட்ட வீடியோவை பார்த்துவிட்டு கிளிகள் குறித்து யாரோ வனத்துறைக்கு புகார் அளித்துவிட்டதாக தெரிகிறது.

அந்த கிளியை 3 ஆண்டுகளாக வளர்த்து வருகிறார்களாம். இந்த கிளிகள் ரோபோவின் மகள் பிகில் படத்தில் நடித்த பிறகு வந்ததால் அதற்கு பிகில், ஏஞ்சல் என்ற பெயர்களை வைத்தனராம். ரோபோவை அந்த கிளிகள் ரோபோ என்றே அழைக்குமாம். கிளிகள் வளர்ப்பை வனத்துறைக்கு சொல்லக் கூடாது என நினைத்திருந்தால் எப்படி அது குறித்த வீடியோவை நான் வெளியிட்டிருப்பேன் என ரோபோவின் மனைவி மகள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் கடந்த 15 ஆம் தேதி ரோபோ சங்கர் வீட்டிற்கு சென்றனர். அங்கு ரோபோ சங்கர் குறித்து விசாரித்த போது அவர் குடும்பத்துடன் இலங்கைக்கு சென்றிருப்பதாக காவலர்கள் கூறினர். இதையடுத்து அவரது வீட்டில் வளர்த்து வந்த 2 கிளிகளையும் கூண்டோடு வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த வகை கிளிகளை வீட்டில் வளர்க்கக் கூடாது என்பதால் பறிமுதல் செய்ததாக தெரிவித்தனர்.

இந்த 2 கிளிகளும் வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. இந்த நிலையில் இந்த கிளிகளை ரோபோ சங்கர் எங்கே வாங்கினார் என்ற தகவல் கிடைத்துள்ளது. இந்த கிளிகள் ரோபோ சங்கரின் நண்பர் ஒருவர் கொடுத்ததாக தெரிகிறது. அவர் வெளிநாடுக்கு மாற்றலாகி சென்றதால் அந்த கிளிகளை எடுத்து செல்ல முடியாது என்பதால் ரோபோவிடம் கேட்ட போது அவர் தான் வளர்க்க விரும்புவதாக தெரிவித்தாராம்.

இந்த நிலையில் ரோபோ சங்கரிடம் வனத்துறையினர் விளக்கம் கேட்டனர். அவர் அளித்த விளக்கம் வனத்துறையினருக்கு ஏற்புடையதாக இல்லை. அதனால் அவருக்கு ரூ 2.50 லட்சம் அபராதம் விதித்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com