
காலத்தால் அழியாத பொக்கிஷம் போல், நகைச்சுவை நடிகர்களில் என்றும் ரசிகர்களால் மறக்க முடியாத முக்கியமான நடிகராக இருப்பவர் நடிகர் செந்தில். இன்று அவருக்கு 70வது வயது பூர்த்தி ஆனதை முன்னிட்டு, பீமரத சாந்தி யாகம் நடத்தியுள்ள நிலையில், ரசிகர்கள், திரைத்துறையினர் என பலரும் தங்கள் வாழ்த்துக்களை அவருக்குத் தெரிவித்து வருகின்றனர்.
சினிமாவில் நகைச்சுவை காட்சிகள் என்றாலே வடிவேலு, சந்தானம், சூரி, யோகிபாபு என பல காமெடி நடிகர்கள் நமக்கு நினைவிற்கு வருவார்கள். ஒவ்வொருவரின் தனித்தன்மை வாய்ந்த பாடிலேங்குவேஜ், ரசிகர்களால் கவரப்படும்.
அந்த வகையில், அன்று முதல் இன்று வரை அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கப்படும் நகைச்சுவைக் காட்சிகள் என்றால் அது செந்தில்-கவுண்டமணியின் நகைச்சுவை காட்சிகள்தான். இவர்கள் இருவரையும் ஒருசில படங்களில் மட்டுமே தனித்தனியாக பார்க்க முடியும். பெரும்பாலான படங்களில் இருவரும் இணைந்தே நகைச்சுவை காட்சிகளில் நடித்திருப்பார்கள்.
அதிலும், செந்தில் ஒன்றுமே அறியாதவர் போல் கேள்வி கேட்பதும், டென்ஷனாகும் கவுண்டமணி எட்டி உதைப்பதும் என இருவர் இணைந்து நடிக்கும் காட்சிகள் ஒவ்வொன்றும் தனிரகம்.
யூ-டியூபில் செந்தில் கவுண்டமணி காமெடி சீன்ஸ் என்று தேடினாலே ஒவ்வொரு படத்திலும் இடம்பெற்ற இருவரின் நகைச்சுவை காட்சிகள் சரசரவென வந்து குவியும்.
குறிப்பாக பெட்ரோமாக்ஸ் பல்ப் காமெடி, செந்தில் தூக்கு மாட்டிக் கொண்டு பாடும் காமெடி, வாழைப் பழ காமெடி, கிரீஸ் டப்பா காமெடி என இருவரின் கூட்டணியில் உருவான அனைத்து காமெடிகளும் ரசிக்கத்தக்கவை.
தற்போது, செந்தில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில், இன்று நடிகர் செந்திலுக்கு 70வது வயது பூர்த்தியை முன்னிட்டு திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் பீமரத சாந்தி விழா நடந்துள்ளது.
கோயில் மண்டபத்தில் 64 கலசங்கள் வைக்கப்பட்டு பீமரத சாந்தி சிறப்பு ஹோமங்கள் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் நடிகர் செந்தில் மற்றும் அவரது மனைவி கலைச்செல்விக்கு கலச அபிஷேகம் செய்து வைக்கப்பட்டது.
இந்த பீமரத சாந்தி விழா நிகழ்வில், நடிகர் செந்திலின் மகன்கள், மருமகள்கள் மற்றும் குடும்பத்தினர் என அனைவரும் கலந்துகொண்டனர்.
இதைத்தொடர்ந்து, நடிகர் செந்தில் கோயிலுக்கு வந்திருக்கும் செய்தியை அறிந்த ரசிகர்கள் பலரும் அங்கு கூடிய நிலையில், நடிகர் செந்திலுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.