‘நாட்டின் அடுத்த பிரதமராக மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வர வேண்டும் என்பதே தமது விருப்பம்’ என்கிறார் நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய சத்ருகன் சின்ஹா. பாட்னாவில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த சத்ருகன் சின்ஹாவிடம், ‘காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமராகும் தகுதி இல்லையா?’ என்று கேட்டபோது, “ராகுல் காந்தியும் பிரதமர் பதவிக்கு தகுதியானவர்தான். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால், இந்தியாவின் குடியரசுத் தலைவராக ஒரு பெண்மணி பதவி வகிக்கும் நேரத்தில் புதிய பிரதமரும் பெண்ணாக இருந்தால் நன்றாக இருக்கும். அந்த வகையில் தீவிரமாக அரசியல் நடத்தி வருபவரும், மக்களிடம் செல்வாக்குள்ளவருமான மம்தா பானர்ஜி அந்த பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் என்பதே எனது கருத்தாகும்” என்றார் சத்ருகன் சின்ஹா.
சத்ருகன் சின்ஹா, அசன்சால் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் மேலும் கூறுகையில், “பிரதமர் யார் என்பது உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றே நினைக்கிறேன். இந்தியா கூட்டணியில் திறமையானவர்களுக்கு பஞ்சம் இல்லை. ராகுல் காந்தி நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார். நாட்டின் எதிர்காலமே அவர் கையில் இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். தவிர, சரத்பவார் என்னும் அரசியல் சாணக்கியர் இருக்கிறார். எந்த விவகாரத்திலும வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசும் மம்தா பானர்ஜி இருக்கிறார். ஆனால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத்தான் பிரதமர் மோடியை விட்டால் வேறு ஆள் இல்லை” என்றார் சின்ஹா.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பாஜகவிலிருந்து விலகிய சத்ருகன் சின்ஹா, பின்னர் சிறிது காலம் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். இப்போது திரிணாமூல் காங்கிரஸில் உள்ளார். “பிரதமர் மோடி எதிர்க்கட்சியினரை பார்த்து, ‘வாரிசு அரசியல் செய்கின்றனர். ஊழல் பேர்வழிகள்’ என்று அடிக்கடி குற்றம் சாட்டுகிறார். நான் பாஜகவில் இருந்தவன் என்கிற முறையில் சொல்கிறேன், ஊழல் மற்றும் வாரிசு அரசியலில் பாஜகவினர் சளைத்தவர்கள் அல்ல. மகாராஷ்டிரத்தில் ஊழல் குற்றம் சாட்டியவர்களையே அரசில் சேர்த்துக்கொண்டவர்களுக்கு ஊழல் பற்றி பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது” என்று கேள்வி எழுப்பினார்.
ராகுல் காந்தி பறக்கும் முத்தம் கொடுத்ததாக சர்ச்சை எழுந்துள்ளது பற்றி குறிப்பிட்ட சத்ருகன் சின்ஹா, “அன்றைய தினம் நான் அவையில் இருந்தேன். ராகுல் ஒன்றும் மரியாதைக் குறைவாக நடக்கவில்லை. ஆனால், முன்னாள் நடிகையும், இந்நாள் அமைச்சருமான ஸ்மிருதி இரானி, ராகுல் காந்தி மீது புகார்களை அடுக்கியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. ஏதோ ஒரு நிர்பந்தத்தின் பேரில் அவர் பேசுவதாகவே தெரிகிறது” என்றார் சத்ருகன்.
பீகாரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி இருவரும் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர். மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தலில் திரிணாமூல் வெற்றி பெற்றதைத் தாங்கிக்கொள்ள முடியாமலேயே பிரதமர் மோடி, மேற்கு வங்கத்தில் மம்தா ரத்தக் கிளறியை ஏற்படுத்தி வருவதாக குற்றம் சாட்டி வருகிறார்” என்றார் சத்ருகன் சின்ஹா.