

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், உலக தமிழர்களின் அன்பை பெற்ற பொது ஆளுமையாகவும் உயர்ந்திருப்பவர் நடிகர் சூர்யா.சூர்யாவின் இயற்பெயர் சரவணன் என்பதாகும். தமிழ் சினிமாவில் ஏற்கனவே இப்பெயரில் நடிகர்கள் இருந்ததால், இயக்குநர் மணிரத்தினம் தனக்கு பிடித்த 'சூர்யா' என்ற பெயரை இவருக்கு சூட்டினார்.பட்டப்படிப்பை முடித்த பிறகு சூர்யா முதன்முதலில் கார்மெண்ட்ஸ் (ஆடை நிறுவனம்) ஒன்றில் பணிக்கு சேர்ந்தார். அங்கு அவர் பெற்ற முதல் சம்பளமான 1,200 ரூபாயில் தன் தாய்க்குப் பட்டுப்புடவை வாங்கிக் கொடுத்தார்.
தந்தையின் நடிப்பை பார்த்து சினிமா மீது ஆர்வம் கொண்ட சூர்யாவுக்கு, ஆரம்பத்தில் 'ஆசை' படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தபோது அதை மறுத்துவிட்டார். பின்னர், 1997-ல் இயக்குநர் வசந்த் இயக்கத்தில் வெளியான 'நேருக்கு நேர்' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். வாரிசு நடிகராக இருந்தாலும் இவர் குழந்தை நட்சத்திரமாக எந்தப் படத்திலும் நடித்ததில்லை.மணிரத்தினம் இயக்கிய இந்தி திரைப்படமான 'குரு' படத்தின் தமிழ் பதிப்பில், நாயகன் அபிஷேக் பச்சனுக்கு சூர்யா பின்னணி குரல் (Dubbing) கொடுத்துள்ளார்.
சின்னத்திரையில் 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' என்ற ரியாலிட்டி ஷோ மூலம் வெற்றிகரமான தொகுப்பாளராகவும் முத்திரை பதித்தார்.
சினிமாவைத் தாண்டி, படிக்க வசதியில்லாத ஏழை மாணவர்களின் கல்விக்காக 'அகரம்' என்ற அறக்கட்டளையை நிறுவிப் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றி வருகிறார்.தன் மனதிற்குச் சரியென்று படுவதைத் துணிச்சலாகப் பேச சூர்யா எப்போதும் தயங்கியதில்லை. 'புதிய கல்விக் கொள்கை', 'நீட் தேர்வு' போன்ற பொது பிரச்சினைகளுக்கு எதிராக மக்களின் பக்கமிருந்து குரல் கொடுத்தார்.
இந்நிலையில் அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கத்தின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய வீரமணி என்பவர், "காலம் முடிவு செய்துவிட்டது; கடவுள் முடிவு செய்துவிட்டார். சூர்யா மக்கள் தலைவராக வருவதை இனி யாராலும் தடுக்க முடியாது" என்று அதிரடியாகப் பேசினார்.சூர்யாவை மக்கள் தலைவர் என்று குறிப்பிட்டு வீரமணி பேசிய இந்த பேச்சு, அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "நடிகர் சூர்யா விரைவில் தீவிர அரசியலில் களமிறங்கப் போகிறாரா?" என்ற கேள்விகள் இதன் மூலம் எழுந்துள்ளன.
தற்போது இந்த விவகாரம் ரசிகர்களிடையேயும், அரசியல் விமர்சகர்களிடையேயும் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய விவாத பொருளாக மாறியது.
இந்நிலையில், அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
அனைத்து ஊடக மற்றும் சமூக வலைதள நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்...
28.06.2026 அன்று நடைபெற்ற மாநில-மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்ட வீரமணி, இது என்னுடைய தனிப்பட்ட கருத்து என்று தெளிவாகக் குறிப்பிட்ட பின்னரே தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். ஆனால் அவரது உரையை தவறான விளக்கத்துடன் சமூக வலைத்தளங்களில் பரப்பி அது மன்றத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்ற தோற்றத்தை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதனை யாரும் நம்பவோ, பொருட்படுத்தவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், கடந்த மூன்று ஆண்டுகளாக வீரமணி மன்றத்தின் நிர்வாகத்தில் இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
அதேபோல், சூர்யா அவர்களுக்கு அரசியலுக்கு வருவதற்கான எந்தவித எண்ணமும் இல்லை. அகரம் அறக்கட்டளை மற்றும் நற்பணி இயக்கத்தின் மூலமாக மக்களுக்கான சமூகச் சேவைகளை தொடர்ந்து ஆற்றி வருவதே அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளித்து வருகிறது.
மன்றத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் நிலைப்பாடுகள் செயல் தலைவர் ராஜ் மற்றும் அமைப்பாளர் ராஜ் ஆகியோரின் மூலமாக மட்டுமே வெளியிடப்படும்
மன்றத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பின்பற்றுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சூர்யா ரசிகர் மன்ற கூட்டத்தில் வீரமணி என்பவர் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.