

வயது வந்தோர்க்கான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தென்னிந்திய திரையுலகில் ஏராளமான ரசிகர்களைப் பெற்று தனக்கென தனி இடத்தைப் பெற்றவர் நடிகை ஷகீலா.தென்னிந்திய திரைப்படங்களில், குறிப்பாக மலையாள சினிமாவில், பிரபலமான நடிகை இவர்.
1990-கள் இறுதி மற்றும் 2000களின் தொடக்கத்தில் மலையாளத்தில் வயது வந்தோருக்கான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஷகீலா ஒரு கட்டத்தில் அது போன்ற படங்களில் நடிப்பதை தவிர்த்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரையுலகில் வலம் வரும் ஷகிலா ஜெயம், அழகிய தமிழ்மகன், பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். பலராலும் விமர்சிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய திரைப்படப் பின்னணியிலிருந்து தனது திரையுலக பயணத்தை துவங்கி பின்னர் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் ஷகீலா.
குறிப்பாக அவரது வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்தியில் 'Shakeela' என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டது எந்த நடிகைக்கும் கிடைக்காத சிறப்பு. தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று உற்சாகமாக வலம் வந்த இவரைப் பற்றிய செய்திதான் இப்போது பேசப்படுகிறது.
தற்போது 45 வயதுக்கும் மேலாகும் நடிகை ஷகிலா அதிகளவில் செல்போன் பயன்படுத்தியதால், தனக்கு கழுத்தில் பாதிப்பு ஏற்பட்டு அறுவைச் சிகிச்சை செய்திருப்பதாக வெளியிட்ட செய்தி மற்றும் காணொளிகள் வைரலாகி வருகின்றன. இவர் திடீரென கழுத்தில் அறுவைச் சிகிச்சை செய்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிக நேரம் ஒரே பக்கமாகப் படுத்துக்கொண்டு செல்போனில் கேம் விளையாடியதாலும் ரீல்ஸ் பார்த்ததாலும் கழுத்து நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு, தனக்கு ரூ.3 லட்சம் செலவில் கழுத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது வீடு திரும்பி ஓய்வில் இருக்கும் அவர், செல்போனை அதிகம் பயன்படுத்த வேண்டாம் என்றும் குழந்தைகளுக்குப் கைப்பேசி வழங்கக் கூடாது என்றும் ரசிகர்களுக்கு உருக்கமான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
படுக்கையில் ஒருபுறமாகச் சாய்ந்து கொண்டு தொடர்ந்து 4 மணி நேரம் வரை கேம்ஸ் விளையாடுவது மற்றும் சமூக வலைத்தளப் பக்கங்களில் மூழ்கியிருப்பது போன்ற தவறான உடல் நிலையால் (Improper posture) கழுத்து நரம்புகள் மற்றும் ரத்த நாளங்களில் கடுமையான பாதிப்பு என சொல்லப்படுகிறது.
அறுவை சிகிச்சைக்கு சுமார் 3 லட்சம் ரூபாய் செலவானதுடன் எழுவதற்கும் சாப்பிடுவதற்கும் கூட மற்றவர்களின் உதவி தேவைப்படும் நிலையில் உள்ள அவர், கழுத்தில் மருத்துவப் பெல்ட் (Neck brace) அணிந்து ஓய்வெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களுக்கு காணொளி மூலம் செல்போனை அதிகம் பயன்படுத்த வேண்டாம் என ஷகீலா எச்சரிக்கை விடுத்துள்ளார். "செல்போன் அவசியமான ஒன்றுதான், ஆனால் தேவைக்கு மேல் அதைப் பயன்படுத்தக் கூடாது. நீண்ட நேரம் தலைகுனிந்து செல்போன் பார்ப்பது உடலுக்குப் பெரிய ஆபத்தை விளைவிக்கும்.பெற்றோர்கள் சிறிய குழந்தைகளுக்குத் தொலைபேசி மற்றும் காட்ஜெட்களைக் கொடுக்க வேண்டாம்" எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
ஷகீலாவுக்கு ஏற்பட்ட பாதிப்பு எதனால்?
செல்போனை நீண்ட நேரம் தவறான நிலையில் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு தான் (Improper posture)தவறான உடல் நிலை எனப்படும். குறிப்பாக போனை கீழே பார்த்தபடி நீண்ட நேரம் இருப்பதால் கழுத்து முன்புறமாக வளைதல், நீண்ட நேரம் ஒரே நிலையில் இருப்பதால் கழுத்து, தோள், முதுகு தசைகளில் ஏற்படும் அழுத்தம்,
படுத்துக்கொண்டு போன் பார்ப்பதால் கழுத்து/முதுகின் நிலை மேலும் மோசமாதல் போன்ற பாதிப்புகள் தரும்.
இதனால் கழுத்து வலி, தோள்பட்டை வலி, மேல் முதுகு வலி , தலைவலி போன்றவை வரலாம்..இதனை பொதுவாக உரை கழுத்து (Text neck)அல்லது தொழில்நுட்பக் கழுத்து (Tech neck)என்று குறிப்பிடுகிறார்கள்.
இதை தவிர்க்க சரியான முறையில்: போனை முடிந்தவரை கண்களின் உயரத்திற்கு அருகில் வைத்துப் பார்க்கவும் 20–30 நிமிடங்களுக்கு ஒருமுறை நிலையை மாற்றி சிறிய இடைவெளி எடுக்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். செல்போன் நமது வாழ்வின் பிரிக்க முடியாத அங்கம் எனினும் அதனால் நமது உடல் நலம் பாதிக்கப்பட்டால் நிம்மதி இழக்கப்போவதும் நாம் தான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒரு நடிகையாக இருந்தாலும் தனக்கு எதனால் அறுவைசிகிச்சை நடைபெற்றது என பொதுவெளியில் கூறி மற்றவர்களுக்கு விழிப்புணர்வு தந்த ஷகீலாவுக்கு ஆறுதலும் பாராட்டுகளும் குவிகிறது.