
உலகநாயகன் கமல்ஹாசனின் மகள், பிரபல திரைப்பட நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என பன்முக திறமையுடன் திரையுலகில் வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் பாடகியாக தனது கேரியரை ஆரம்பித்தவர். கமல் நடித்த உன்னைப்போல் ஒருவன் படத்தில் முதல்முதலாக பாடகியாக அறிமுகமானார். சர்வதேச தரத்திலான குரல் வளம் உடையவர் என பலரால் பாராட்டப்பட்டவர் ஸ்ருதிஹாசன். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான ஏழாம் அறிவு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான படங்கள் வரவேற்பை பெறாத காரணத்தால் தமிழில் அவருக்கான வாய்ப்புகள் குறைந்ததால் தெலுங்கு மொழியில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
சமீபத்தில் கமல்ஹாசனின் 'தக் லைஃப்' படத்தில் இசை வெளியீட்டு விழாவில் 'வின்வேலி நாயகா' பாடலை பாடியதன் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் ஸ்ருதிஹாசன். கமலுக்கு முன்னால் இவர் பாடிய இந்த பாடல் இணையத்தை பிரமிக்க வைத்தது, மேலும் தந்தையும் நடிகருமாக கமல்ஹாசன் இதை ஒரு பெருமையான தருணம் என்று சொன்னார்.
தற்போது லோகேஷ் கனகராஜின் ஆக்ஷன் த்ரில்லர் படமான கூலியில் ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். மேலும் பிரசாந்த் நீலின் 'சலார் பகுதி 2' படத்திலும் அவர் மீண்டும் நடிக்க உள்ளார்.
இந்நிலையில் தான் நடிகை ஸ்ருதி ஹாசன், தனது சமூக ஊடக தளமான எக்ஸ் தள கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக அறிவித்துள்ளார். இது குறித்து, அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘ஹாய் லவ்லீஸ், எனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். எனவே, நான் திரும்பி வரும் வரை தயவுசெய்து அந்தப் பக்கத்துடன் தொடர்பு கொள்ள வேண்டாம்’ என்று தெரிவித்துள்ளார். தற்போது, எக்ஸ் தள ஆதரவு குழுவுடன் இணைந்து கணக்கை மீட்டெடுக்க முயற்சி செய்து வருகிறார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் நடிகையும் தயாரிப்பாளருமான குஷ்புவின் எக்ஸ் தள கணக்கு ஹேக் செய்யப்பட்டது. பின்னர் சில நாட்களில் அது மீட்டெடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மார்ச் மாதம் இசையமைப்பாளர் டி. இமானின் எக்ஸ் தள கணக்கு ஹேக் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து ஜூன் 18-ம்தேதி தனது கணக்கை வெற்றிகரமாக மீட்டெடுத்ததாகவும், மீண்டும் எக்ஸில் இணைந்ததாகவும் அறிவித்திருந்தார் டி.இமான். இப்போது நடிகை ஸ்ருதியின் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது.
இதேபோன்று 2017-ல் ஸ்ருதி ஹாசனின் எக்ஸ் தள கணக்கு ஹேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த நேரத்தில் ஒரு ட்வீட் மூலம் தனது பின்தொடர்பவர்களுக்கு ஹேக் செய்யப்பட்டதை தெரிவித்தார்.
இவ்வாறு பிரபலங்களின் எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் ஹேக் செய்யப்படுவது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது. இதனை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிரபலங்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.