மொரீஷியஸ் தீவில் அதானி நிறுவன பரிவர்த்தனைகள் தாமதமாகும் செபியின் விசாரணை!

மொரீஷியஸ் தீவில் அதானி நிறுவன பரிவர்த்தனைகள் தாமதமாகும் செபியின் விசாரணை!

அதானி குழுமங்கள் பற்றி விசாரணை செய்ய இன்னும் ஆறு மாதங்கள் அவகாசம் கேட்டு செபி அமைப்பு, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறது. இந்தியாவுக்கு வெளியே உள்ள பல்வேறு வர்த்தக அமைப்புகளை தொடர்புகொண்டு நிறைய விபரங்களைப் பெற வேண்டியிருப்பதால் கால அவகாசம் கேட்டிருக்கிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன் பார்க் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் வெளியிட்ட அறிக்கையில் அதானி குழுமம் மோசடி செய்திருப்பதாக குற்றம் சாட்டியது. மொரீஷியஸ் தீவில் உள்ள ஷெல் நிறுவனங்களின் உதவியோடு அதானி குழுமத்தை சேர்ந்த கௌதம் அதானி, பங்குச்சந்தையில் தன்னுடைய நிறுவனத்தின் விலையை போலியாக நிர்ணயித்தார் என்பது குற்றச்சாட்டு.

அதைத் தொடர்ந்து இந்தியாவில் அதானி நிறுவனத்தின் பங்குகள் சரிவை சந்தித்தன. இது அரசியல் பிரச்னையாகவும் உருவெடுத்த து. பிரதமர் மோடிக்கு நெருக்கமான கௌதம் அதானி மீதான குற்றச்சாட்டுகள் பற்றி விளக்கமளிக்க வேண்டுமென்று ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசியது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டது உண்மையா என்பதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உச்சநீதிமன்றம் செபி அமைப்பை கேட்டுக்கொண்டிருந்தது. இது குறித்து விசாரணையை ஆரம்பித்த செபி அமைப்பு, இன்னும் பல தகவல்களை கேட்டுப் பெற வேண்டியிருப்பதால் ஆறு மாத கால அவகாசம் கேட்டிருக்கிறது.

ஹிண்டன்பர்க் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 12 முக்கியமான பரிமாற்றங்கள் புரிந்து கொள்ள கடினமாக இருப்பதாகவும், அது தொடர்பாக வெளிநாடுகளை சேர்ந்த 11 ரெகுலேட்டர்களை அணுகியிருப்பதாக செபி தெரிவித்துள்ளது.

எனினும் 2016ல் அதானி நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லையென்பதை செபி அமைப்பு தெரிவித்திருக்கிறது. 2016ல் பங்குச் சந்தையில் நடந்த குளறுபடிகள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் 51 நிறுவனங்கள் மீது செபி அமைப்பு விசாரணை நடத்தியது. அந்த 51 நிறுவனங்களில் அதானி நிறுவனம் இல்லையென்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் மொரீஷியஸ் தீவின் நிதியமைச்சரான மேகன் குமார் சீரட்டம் ஒரு கேள்விக்கென்று அளித்த பதிலில் ஹிண்டன்பார்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகள் பற்றி விளக்கம் தந்திருக்கிறார். ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, மொரீஷியஸில் எந்தவித ஷெல் நிறுவனங்களும் செயல்படவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், மொரீஷியல் தீவில் ஷெல் நிறுவனங்கள் இருக்கிறதா என்பது குறித்து கேள்வி எழுப்பி எழுதிய கடிதத்திற்கு மொரீஷியல் தீவின் நிதியமைச்சர் பதிலளித்திருக்கிறார். ஹிண்டன்பார்க் அறிக்கையில் மொரீஷியஸ் தீவில் உள்ள நிறுவனங்கள் பற்றி சொல்லப்பட்டவை எதுவும் உண்மையல்ல. அதற்கு எந்தவித ஆதாரமுமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை ஷெல் நிறுவனங்கள் பற்றியோ, சட்டத்திற்கு புறம்பான வகையில் செயல்படும் நிறுவனங்கள் பற்றியோ எந்தவித பிரச்னையையும் நாங்கள் எதிர்கொள்ளவில்லை என்றும் கடித த்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதானி நிறுவனம் மீதான விசாரணையை தாமதப்படுத்தாமல் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல் படி தேவையான விபரங்களை உடனே பெற்றுத் தரவேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பிக்கள் செபி அமைப்புக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

எது எப்படியோ, நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் வரை அதானி நிறுவனம் பற்றிய எபிசோட் உயிர்ப்போடு இருக்கும் என்று தெரிகிறது. அதானி நிறுவனத்தின் முறைகேடுகள் பற்றி எதிர்க்கட்சிகள் ஏராளமான பேசினாலும், ஆளுங்கட்சி தரப்பு அமைதி காக்கிறது. இது பற்றி பிரதமர் மோடியோ, அதானி நிறுவனத்தின் தலைவரான கௌதம் அதானியோ எந்த விளக்கமும் தரவில்லை என்பது குறிப்படத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com