பங்குகள் மீதான ரூ. 9,203 கோடி கடன்களை முன்கூட்டியே செலுத்த அதானி குழுமம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு புறம் முதலீட்டாளர்களுக்கு அச்சத்தினை ஏற்படுத்தி வரும் நிலையில், மறுபுறம் மக்கள் பெரும்பான்மையாக நம்பி முதலீடு செய்யும் இடமான எஸ்பிஐ, எல்ஐசி நிறுவனங்களும் அதானி குழுமத்தில் பெரும் தொகையை முதலீடு செய்துள்ளன. இது இன்னும் அச்சமூட்டும் ஒன்றாக மாறியுள்ளன. சாமானிய மக்களின் முதலீடு என்னவாகும்?
வங்கிகள் தரப்பில் அதானி குழுமத்தில் 80,000 கோடி ரூபாய் என்ற அளவில் கடன் கொடுத்துள்ளது. இதில் எஸ்பிஐ-யின் பங்கு மிக முக்கியமானது எனலாம். எஸ்பிஐ 27,000 கோடி ரூபாய் கடன் கொடுத்துள்ளது. இதே பேங்க் ஆப் பரோடா 5500 கோடி ரூபாயும், பஞ்சாப் நேஷனல் வங்கி 7000 கோடி ரூபாயும் கடன் கொடுத்துள்ளன. ஆக இந்த கடனின் எதிர்காலம் குறித்தும் பெரும் கேள்வி எழுந்துள்ளது.
ஹிண்டர்பர்க் ஆய்வறிக்கையால், அதானி குழுமம் தொடர்ந்து மிகப்பெரிய சரிவை சந்தித்து வருகிறது. அந்த வகையில், அதானி குழுமம், பங்குகளுக்கு எதிரான கடன்களை முழுமையாகத் திரும்பச் செலுத்த திட்டமிடுவதாகவும், இந்தத் தொகையை அடுத்த 30 – 45 நாட்களில் அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், பங்குகளுக்கு எதிரான கடன்களை முன்கூட்டியே செலுத்த முடிவு எடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த முடிவு முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவி வரும் அச்சத்தினைப் போக்கும் என்றும், அதானி குழுமத்தின் மீது குறைந்த நம்பிக்கையை மீட்டெடுக்கவும் இது பயனுள்ளதாக இருக்கும் என்று அதானி குழுமம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், 9,203 கோடி கடன்களை முன்கூட்டியே செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
முன்னதாக, ETயில் வெளியான அறிக்கை ஒன்றில் இரண்டு அதானி நிறுவனங்களின் 3000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை திரும்ப பெற திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டது. இதில் அதானி போட்ஸ் & செஸ் மற்றும் அம்புஜா சிமெண்ட் உள்ளிட்ட இரு நிறுவனங்களும் அடங்கும். இருப்பினும், இது குறித்து பங்குச் சந்தைக்கு இதுவரையில் எந்த அறிவிப்பும் தாக்கல் செய்யப்படவில்லை. அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் நிலையில் இதுகுறித்த முழு விவரங்கள் தெரியவரலாம்.