இந்தியாவின் எதிர்காலத்தை அதானி குழுமம் பின்னோக்கி இழுக்கிறது!

ஹிண்டன்பர்க் எச்சரிக்கை
இந்தியாவின் எதிர்காலத்தை அதானி குழுமம் பின்னோக்கி இழுக்கிறது!
Published on

மீப காலங்களில் அதானி குழுமம் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்து வருகின்றன. அதனால் அது பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளது. இது குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக, ‘ஹிண்டன்பர்க் அறிக்கை என்பது இந்தியாவின் மீதான ஒரு திட்டமிட்ட தாக்குதல்’ என்று அதானி குழுமத்தின் சார்பில் கூறப்பட்டது.

அதற்கு பதிலடி தரும் விதமாக ஹிண்டன்பர்க், ‘இந்தியா ஒரு வளமான ஜனநாயக நாடு. நல்ல எதிர்காலத்தோடு, சூப்பர் பவராக தற்சமயம் உருவெடுத்துக் கொண்டிருக்கும் நாடு. அந்நாட்டின் எதிர்காலத்தை அதானி குழுமம் பின்னோக்கி இழுத்துக்கொண்டிருக்கிறது. இந்திய தேசியக் கொடியை போர்த்திக்கொண்டு அந்த தேசத்தை அந்நிறுவனம் சூறையாடிக் கொண்டிருக்கிறது. மோசடி என்பதை உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் செய்தாலும் அது மோசடிதான்’ என்று தற்போது அது கூறியுள்ளது.

பல்வேறு முறைகேடுகளில் அதானி குழுமம் ஈடுபட்டுள்ளதாக கடந்த வாரம் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து அதானி குழுமப் பங்கு மதிப்பு பெருவாரியாக சரிந்தன. இந்நிலையில் அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. மற்றும் எஸ்.பி.ஐ. உள்ளிட்ட பல பொதுத்துறை நிறுவனங்களும் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால் அந்நிறுவனங்களும் பெரிய இழப்பைச் சந்தித்தன.

இதனைத் தொடர்ந்து, ‘ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தின் இந்தக் குற்றச்சாட்டுக்கு இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் விசாரணை அமைப்புகள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்’ என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் அவர், 'எல்.ஐ.சி. ஒரு பொதுத் துறை நிறுவனம். அதில் இருப்பது மக்களின் பணம். அந்தப் பணத்தை எல்.ஐ.சி. நிறுவனம் அதானி குழுமத்தில் 77 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கையால், இந்த முதலீட்டில் எல்.ஐ.சி.க்கு 23,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தவிர, எல்.ஐ.சி.யின் பங்கு மதிப்பு 22,500 கோடி ரூபாய் சரிந்துள்ளது. அதேபோல், அதானி குழுமத்துக்கு பொதுத் துறை வங்கியான எஸ்.பி.ஐ. 81,200 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது.

இந்தச் சூழலிலும் எல்.ஐ.சி. 300 கோடி ரூபாயையும், எஸ்.பி.ஐ. 225 கோடி ரூபாயையும் அதானி குழுமத்தில் முதலீடு செய்கின்றன. இது குறித்து ரிசர்வ் வங்கி, செபி, அமலாக்கத் துறை, சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளும் மத்திய நிதி அமைச்சகமும் இன்னும் அமைதி காக்கின்றன' என்று அவர் தெரிவித்துள்ளார். அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. நிறுவனம் மக்கள் பணமான 77 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com