தொழிலதிபர் அதானி நிறுவனங்கள் பங்குச் சந்தையில் மிகப் பெரிய மோசடியில் ஈடுபட்டது குறித்து ஹிண்டன்பர்க் எனும் முதலீட்டு ஆய்வு நிறுவனம் பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து பங்குச் சந்தைகளில் முறைகேடு நடக்காமல் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும்படி, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. மேலும், உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ், சிபி.ஐ. இது குறித்து விசாரிக்க வேண்டும் எனவும் அந்த மனுக்களில் கோரப்பட்டிருந்தன.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டிஓய் சந்திர சூட், நீதிபதிகள் பி.எ.ஸ்.நரசிம்ஹா, ஜே.பி.பரதிவாலா அமர்வு ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில், ''அதானி குழுமம் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்ட அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட நிபுணர் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது. எஸ்பிஐ முன்னாள் தலைவர் ஓ.பி.பாட், ஓய்வு பெற்ற நீதிபதி ஜே.பி. தேவதர், பிரபல வங்கியாளர் கே.வி.கமல்நாத். இன்போசிஸ் துணை நிறுவனர் நாதன் நிலேகனி, வழக்கறிஞர் சோமசேகர் சுந்தரேசன் ஆகியோர் நிபுணர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழு, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம்.சாப்ரேவால் கண்காணிக்கப்படும்.
முதலீட்டாளர்களைப் பாதுகாப்பது, அவர்களின் விழிப்புணர்வை வலுப்படுத்துவது, அதானி குழுமத்தால் ஏதாவது சட்டமீறல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளதா என்பதை கண்டறிவது ஆகிய நோக்கங்களுக்காக இக்குழு அமைக்கப்படுகிறது. இக்குழு தனது அறிக்கையை முத்திரையிட்ட உறையில் இரண்டு மாதங்களுக்குள் தாக்கல் செய்யும். நிபுணர் குழுவின் பணிகளுக்கு செபி மற்றும் பிற அமைப்புகள் அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். செபி மற்றும் பிற நிறுவனங்களின் பணிகளை நிபுணர் குழு பிரதிபலிக்காது'' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சென்ற மாதம் 17ம் தேதி நடைபெற்ற விசாரணையில், நிபுணர் குழு அமைக்கும் விவகாரம் தொடர்பாக மத்திய அரசால் அளிக்கப்பட்ட மூடிய பரிந்துரை கடிதத்தை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த விவகாரத்தில் முதலீட்டாளர்களின் நலன் கருதி வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தத் தாங்கள் விரும்புவதாக வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஓய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா, நீதிபதி ஜெ.பி.பர்திவாலா அமர்வு தெரிவித்தது. மேலும், ''விசாரணைக் குழுவில் இடம்பெறும் நிபுணர்களை உச்ச நீதிமன்றமே தேர்வு செய்து, முழு வெளிப்படைத்தன்மையை பராமரிக்கும். அரசு பரிந்துரைக்கும் நிபுணர்களை ஏற்றுக்கொண்டால், இந்த விசாரணைக் குழு மத்திய அரசு அமைத்த குழுவாகவே இருக்கும். இந்த விசாரணைக்குழு மீது மக்களுக்கு முழு நம்பிக்கை இருக்க வேண்டும்'' என்றும் நீதிபதிகள் தெரிவித்திருக்கின்றனர்.