உலக பணக்காரர்கள் பட்டியலில் அதானி 11-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்!

கெளதம் அதானி
கெளதம் அதானி

உலக பணக்காரர்கள் பட்டியலில் அதானி குழுமத்தை சார்ந்த கெளதம் அதானி 11-வது இடத்துக்கு சரிந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே உலக பணக்காரர்கள் பட்டியலில் முன்னணியில் இருந்துவந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டர்பர்க் ரிசர்ச் நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அந்த ஆய்வறிக்கையில், அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறது என்றும் அக்குழுமத்துக்கு அதிக அளவில் கடன் உள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தது. ஹிண்டன்பர்க் அமைப்பின் அறிக்கை வெளியாகி 3 வர்த்தக நாளில் மட்டும் இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் சுமார் 11.6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சந்தை முதலீட்டை இழந்து முதலீட்டாளர்களுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் அதானி குழுமத்தைச் சார்ந்த 7 நிறுவனங்கள் தங்களது நிதிநிலையை உண்மைக்கு புறம்பான முறையில் வலுவாக காட்டுகிறது என்றும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த ஆய்வறிக்கை வெளியான பிறகு அதானி நிறுவன பங்குகள் தொடர் சரிவை சந்தித்தன. கடந்த 27-ம் தேதியன்று அதானி குழும பங்குகள் 25 சதவீதத்துக்கு மேல் சரிவை கண்டன. இதனையடுத்து கெளதம் அதானியின் சொத்து மதிப்பு சரிய தொடங்கியது. ஜனவரி 24 ஆம் தேதி ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தின் அறிக்கை வெளியான பின்பு மும்பை பங்குச் சந்தைகளில் உருவான தாக்கம் மூலம் பிஎஸ்இயில் பட்டியலிடப்பட்ட அனைத்து பங்குகளின் சந்தை மூலதனம் மூன்று நாளில் 268.8 லட்சம் கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.

புளூம்பெர்க் பில்லியனர் இண்டெக்ஸ் படி, கடந்த 3 வர்த்தக நாளில் அதானியின் சொத்துமதிப்பு 3400 கோடி டாலர் அளவுக்கு சரிந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, அதானியின் மொத்த சொத்துமதிப்பு 8440 கோடி டாலராக உள்ளது. உலக பணக்காரர்கள் பட்டியலில் 2-வது இடத்திலிருந்து 11-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்தப் பட்டியலில் 12-வது இடத்தில் முகேஷ் அம்பானி உள்ளார். அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு 8220 கோடி டாலராக உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com