கூடுதலாக 3 ஆயிரம் குரூப் 4 பணியிடங்கள் அதிகரிப்பு: டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு!

TNPSC
TNPSC

மாநில அரசு பணியிடங்களில் ஏற்கனவே இருந்த காலியிடங்களோடு கூடுதலாக 3000 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டிருப்பதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்திருக்கிறது. குரூப் 4 பதவிகளுக்கான பணியிடங்கள் அதிகரிப்பட்டிருப்பதால் போட்டித் தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில் அடுத்த கட்ட பணிகள் துரிதமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குரூப் 4 பதவிகளுக்கான போட்டித்தேர்வுகள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் ஏற்கனவே நடத்தப்பட்டுவிட்டன. எத்தனை காலியிடங்கள், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எத்தனை என்பது குறித்த தெளிவான விபரங்கள் இல்லாத நிலை இருந்து வந்தது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்பட குரூப்-4 பதவிகளுக்கான போட்டித் தேர்வுகள் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடத்தி முடிக்கப்பட்டன.

காலியிடங்களுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி, கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிட்டது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 20 லட்சத்திற்கும் விண்ணப்பித்திருந்தார்கள். அதில் 18 லட்சம் பேர் போட்டித் தேர்வை எழுதினார்கள். இதன் போட்டித் தேர்வின் முடிவுகள் மூன்று மாதங்களுக்கு முன்னர் வெளியானது. எத்தனை பணியிடங்கள் என்பது தெளிவில்லை என்பதுதால் டி.என்.பி.எஸ்.சி செயல்பாடுகளை பலர் விமர்சித்து வந்தார்கள்.

7000 காலியிடங்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூடுதலாக சில இடங்களை சேர்த்து 10 ஆயிரம் பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டிருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் இது குறித்து கூடுதல் விபரங்களும் தரப்பட்டுள்ளன. 5 ஆயிரத்து 321 இளநிலை உதவியாளர், 3 ஆயிரத்து 377 தட்டச்சர், 1,079 சுருக்கெழுத்தர், 425 கிராம நிர்வாக அலுவலர், 69 பில் கலெக்டர், 20 கள உதவியாளர், ஒரு இருப்பு காப்பாளர் என மொத்தம் 10 ஆயிரத்து 292 இடங்கள் குரூப்-4 பதவிகளில் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு அனைத்தும் முடிவடைந்த நிலையில் டி.என்.பி.எஸ்.சி. எப்போது அடுத்த கட்ட பணிகளை செய்யும் என்று தேர்வெழுதியவர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். கடந்த காலத்தில் டி.என்.பி.எஸ்.சி. நடத்திய பல்வேறு போட்டித் தேர்வுகள் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com