சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நேற்று காவல் துறை சார்பில் நடைபெற்ற இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள், ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு மேற்கண்ட பதக்கங்களை வழங்கி சிறப்பித்தார்.
அந்த விழாவில் அவர் பேசும்போது, “முதலமைச்சர் என்ற முறையில் தினமும் பல்வேறு துறைகள் சார்பில் நடக்கும் நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொள்கிறேன். இன்று காவல்துறை சார்பாக நடக்கும் விழாவில் பங்கெடுப்பதில் கூடுதல் மகிழ்ச்சி. எல்லாத் துறைகளும் என்னுடைய துறைகள்தான். இருந்தாலும், காவல்துறையினர் என்னை அதிகம் உரிமை கொண்டாடிக் கொள்ள முடியும் என்பதுதான் உண்மை. என் துறையைச் சேர்ந்த காவலர்கள் பல்வேறு பதக்கங்களை பெற்றிருப்பதை பார்க்கும்போது நான் பதக்கம் வாங்கியதுபோல எனக்கு ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது.
இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள், ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கங்கள், தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் ஆகியவற்றை பெற்றுள்ள காவலர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். காவல்துறை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, ஊர்க்காவல் மற்றும் குடிமை பாதுகாப்புப் படை, தடய அறிவியல் ஆகிய துறைகளில் பணியாற்றும் காவலர்களுக்கு இந்தப் பதக்கங்கள் வழங்கப்பட்டிருக்கிறது.
மகளிர் பொன்விழா ஆண்டான இப்போது, மகளிர் காவலர்களிடையே நீண்ட நாட்களாக இருக்கும் ஒரு கோரிக்கையை மிகுந்த மகிழ்ச்சியோடும் மனைநிறைவோடும், இந்த நிகழ்ச்சியில் அறிவிப்பாக நான் வெளியிட விரும்புகிறேன். தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு ஒரு ஆண்டு மகப்பேறு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறை முடிந்து, அவர்கள் பணிக்குத் திரும்பும்போது அவர்கள் தங்கள் குழந்தைகளை பராமரிப்பதில் பல சிரமங்கள் ஏற்படுவதாகக் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
அவர்களின் கோரிக்கையை ஏற்று, மகப்பேறு விடுமுறையில் இருந்து பணிக்குத் திரும்பும் பெண் காவலர்களுக்கு, அவர்கள் பணிமூப்புக்கு விலக்களித்து, அவர்களுடைய பெற்றோர்களோ அல்லது கணவர் வீட்டைச் சார்ந்தவர்களோ வசிக்கும் மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பணிமாறுதல் வழங்க அரசு முடிவு செய்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதிக்கும் குற்றச்செயல் பிரச்னைகளை தீர்ப்பதில் நம்முடைய பெண் காவலர்கள் மிக முக்கியப் பங்காற்றுகிறார்கள். எனவே, இப்படிப்பட்ட குற்றங்களை கையாளுவதில் பெண் காவலர்களின் தொழில்முறைத் திறன்களை மேலும் மேம்படுத்தும் வகையில், பெண் கடத்தல் குற்றங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்களை விசாரித்து தீர்ப்பதற்கு அவர்களுக்கு சிறப்புத் திறன் பயிற்சி அளிக்கப்படும்.
குற்றங்களை குறைக்கும் துறையாக மட்டும் இல்லாமல், குற்றங்கள் நடப்பதற்கு முன்பே தடுக்கும் துறையாக காவல் துறை செயல்பட வேண்டும் என்று நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். குற்றங்கள் நடக்காத மாநிலமாக, போதைப் பொருள் நடமாட்டம் இல்லாத மாநிலமாக, பாலியல் குற்றம் இல்லாத மாநிலமாக - நம்முடைய மாநிலம் உருவாக வேண்டும்.
மனித வளர்ச்சியின் அனைத்துக் குறியீடுகளிலும் முன்னணி மாநிலமாக இருக்கும் தமிழ்நாடு, குற்றச் சம்பவங்களில் பூஜ்ஜியமாக இருந்தால்தான் நமக்கெல்லாம் பெருமை. இதில் பூஜ்ஜியம் வாங்க, 100 விழுக்காடு அர்ப்பணிப்புடன், அனைத்துக் காவலர்களும் பணியாற்ற வேண்டும்” என்று பேசினார்.
இந்த விழாவில் அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் மற்றும் காவல் துறை இயக்குநர்கள், அலுவலர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.