‘தொழிலாளர்களுக்கு கூடுதல் மருத்துவமனைகள், மருந்தகங்கள்’அண்ணாமலை மே தின வாழ்த்து!

‘தொழிலாளர்களுக்கு கூடுதல் மருத்துவமனைகள், மருந்தகங்கள்’அண்ணாமலை மே தின வாழ்த்து!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

மே 1, உழைப்பாளா் தினத்தை  முன்னிட்டு, தொழிலாளர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு பாஜக தலைவா் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். அந்த வாழ்த்துச் செய்தியில் அவர், "உலகம் உருவாகிய காலம் தொட்டு, உழைப்பினால் உண்டான வியர்வைத் துளிகளை தொழில் வளர்ச்சிக்கும், நாட்டின் முன்னேற்றத்துக்கும் தந்து தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கும், தொழிலாளர் தோழர்களே! உங்கள் அனைவருக்கும் தொழிலாளர் திருநாளான மே தின நல்வாழ்த்துக்கள். நம் பரந்த பாரத தேசத்தின், அபரிமிதமான மனித சக்திதான், நம்முடைய தொழில் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் துணை நிற்கிறது என்று உணர்ந்தவராக, பாரதப் பிரதமர் மோடி, தொழிலாளர் நலனுக்காக பல நல்ல திட்டங்களை வழங்கியுள்ளார்.

தொழிலாளர் நலனுக்காக தமிழகத்தில் மத்திய அரசின் நிதி உதவியுடன் ஏற்கெனவே 237 ESIC மருந்தகங்கள் இயங்கி வருகின்றன. இந்த தொழிலாளர் தினத்தைத் தொடர்ந்து விழுப்புரம், விக்கிரவாண்டி, கள்ளக்குறிச்சி, மாமல்லபுரம், திருவண்ணாமலை ஆகிய ஐந்து இடங்களில் புதிய ESIC மருந்தகங்கள் மத்திய அரசால் திறக்கப்படவிருக்கின்றன.

மத்திய அரசின் ESIC சார்பில் தமிழகத்தில் எட்டு மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. இது தவிர, கோவை மற்றும் சென்னை கேகே நகரில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் இன்னும் எட்டு இடங்களில் ESIC மருத்துவமனைகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் திருப்பூர், ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடியில் ESIC மருத்துவமனைகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. மேலும், நாகர்கோயில், திண்டுக்கல், ஈரோடு, வாணியம்பாடி, செங்கல்பட்டு. ஆகிய இடங்களில் மத்திய அரசு அனுமதி அளித்தும், மாநில அரசு நிலம் ஒதுக்காததால், இந்த மருத்துவமனைகள் தொடங்கப்படாமல் இருக்கின்றன.

தொழிலாளர்களின் பணி நேரத்தை 50 சதவிகிதம் உயர்த்திட ஆளும் திமுக முயற்சி செய்தபோது, அதை எதிர்த்து சட்டமன்றத்தில் குரல் கொடுத்த பாரதிய ஜனதா கட்சி என்றுமே தொழிலாளர் நலம் காக்க, உங்களோடு துணை நிற்கும்’’ என்று அந்த வாழ்த்துச் செய்தியில் கூறி இருக்கிறார்.

logo
Kalki Online
kalkionline.com