அடேங்கப்பா! சூரியனை விட 30 பில்லியன் மடங்கு பெரிய கருந்துளை (Black Hole) கண்டுபிடிப்பு!

அடேங்கப்பா! சூரியனை விட 30 பில்லியன் மடங்கு பெரிய கருந்துளை (Black Hole) கண்டுபிடிப்பு!

சூரியனை விட 30 பில்லியன் மடங்கு நிறை கொண்ட ஒரு அல்ட்ரா மேசிவ் கருந்துளை (Ultra Massive Black Hole) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கருந்துளைகளிலேயே இதுதான் மிகப்பெரியது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

புவியீர்ப்பு லென்சிங் என்ற முறை மூலமாக இந்த மிகப்பெரிய கருந்துளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது கருந்துளையால் ஒளியையும் வளைத்து பயணிக்கச் செய்ய முடியும். அவ்வாறு விண்வெளியில் எங்கெல்லாம் ஒளியானது வளைந்து செல்கிறது என்பதை புவியீர்ப்பு லென்சிங் முறை மூலமாகக் கண்டுபிடிக்கலாம். தற்போது கண்டுபிடிக்கப்பட்ட கருந்துளையில் ஒளி வளைந்து செல்லும் அளவைப் பார்க்கும்போது, இது நிச்சயமாக ஒரு அல்ட்ரா மேஸிவ் கருந்துளையாக இருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

இதைக் கண்டுபிடிக்க ஆராய்ச்சியாளர்கள் சூப்பர்கம்ப்யூட்டர் சிமுலேஷனைப் பயன்படுத்தியுள்ளனர். சிமுலேட்டர் வழியாக பல்லாயிரக்கணக்கான ஒளியை விண்வெளியில் ஊடுருவச்செய்து, அவை எங்கெல்லாம் விலகலை சந்திக்கிறதோ, அங்கே கருந்துளை இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கிறார்கள். ஒளி விலகும் தன்மையைக் கொண்டு ஒவ்வொரு கருந்துளையின் நிறையும் அனுமாணிக்கப்படுகிறது. இந்த முறையில் தான் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஒரு அல்ட்ரா மேசிவ் கருந்துளை என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

Hubble தொலைநோக்கியைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட புகைப்படத்தை இதனோடு ஒப்பீடு செய்து பார்க்கும்போது, அதன் அளவீடுகள் சரியாக இருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள். இது நமது சூரியனை விட 30 பில்லியன் மடங்கு நிறை அதிகமாக கொண்டிருக்கலாம் என்பதை இந்த ஒப்பீடு மூலமாகவே அவர்கள் கண்டறிந்தார்கள். இது விஞ்ஞானிகளால் அரிதாகவே காணக்கூடிய அளவாகும்.

இந்த ஆராய்ச்சி முடிவுகள், ராயல் வானியல் சங்கத்தின் மாதாந்திர அறிவிப்பு இதழில் வெளியிடப்பட்டுள்ளது. "நமது சூரியனை விட சுமார் 30 பில்லியன் மடங்கு நிறை கொண்ட இந்த கருந்துளை இதுவரை கண்டறியப்பட்டவற்றில் மிகப்பெரிய ஒன்றாகும். இந்த கருந்துளை சில Theory அடிப்படையில் மேலும் பெரியதாக மாறும் என நாங்கள் நம்புகிறோம். எனவே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவற்றில் இது மிகவும் அற்புதமான ஒன்றாகும்" என இந்த ஆராய்ச்சியின் முதன்மை ஆசிரியரான ஜேம்ஸ் நைட்டிங்கேல் ஒரு செய்தி அறிக்கையில் கூறியுள்ளார். இவர் தற்போது டர்ஹாம் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக உள்ளார்.

இவருடைய கூற்றுப்படி, நமக்கு தெரிந்த பெரும்பாலான கருந்துளைகள் தற்போது செயலில் உள்ளன. ஒரு கருந்துளை செயலில் இருந்தால், அது அதன் சுற்றுப்புறத்திலிருந்து பொருட்களை இழுத்து வெப்பத்தை உருவாக்கி, ஒளி, எக்ஸ் கதிர்கள் மற்றும் கதிர்வீச்சு என பலவிதமான ஆற்றல்களை வெளியிடுகிறது.

இவ்வாறு வெளியாகும் ஒளியில் ஏற்படும் விலகல், மற்றும் பூமியிலிருந்து அனுப்பப்படும் ஒளியால் ஏற்படும் விலகலை வைத்து கருந்துளைகளைப் பற்றி அறிவது சாத்தியமாகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com