பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் அதிமுகவினருக்கும் - பாஜகவினருக்கும் அண்ணா குறித்து அண்ணாமலை கூறிய கருத்துக்கு கடும் கண்டனம் வலுத்தது. பலரும் கூட்டணி முறியவுள்ளதா என கேள்வி எழுப்பி வந்த நிலையில் இன்று காலை அதிமுக ஆலோசனை நடைபெற்றது.
அதிமுக தொண்டர்களின் விருப்பத்திற்கும் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்கும் வகையில் இன்று முதல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிக் கொள்கிறது என அதிமுக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதாகவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துதான் ஆக வேண்டும்; அதிமுக தலைமையில் திமுகவுக்கு எதிராக மெகா கூட்டணியை தனித்தே உருவாக்குவோம் என பெரும்பான்மை மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் கூறினர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி அளித்த பேட்டியில்,” மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டை சிறுமைபடுத்தியும், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக விமர்சித்து வந்த பாஜக தலைமையின் செயல் தொண்டர்களை மிகவும் கொந்தளிக்க செய்தது. இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகி கொள்கிறோம். மேலும் வரும் தேர்தலை பாஜக அல்லாத கட்சிகளோடு இணைந்து சந்திப்போம்” என தெரிவிக்கிறோம்.
இந்த நிலையில், பாஜக கூட்டணி முறிவை அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். ராயப்பேட்டை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள்.