அ.தி.மு.கவின் பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஆரம்பமானது; சசிகலா போட்டியிடுவாரா?

அ.தி.மு.கவின் பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஆரம்பமானது; சசிகலா போட்டியிடுவாரா?

யாரும் எதிர்பாராத நிலையில், அ.தி.மு.கவின் பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளரின் வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில் அதற்கு முன்னதாகவே பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி முடித்திட எடப்பாடி தரப்பு சுறுசுறுப்பாக செயல்பட்டிருக்கிறது.

எடப்பாடி கூட்டிய பொதுக்குழுவுக்கு தடை கோரி, உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு விசாரணையின்போது அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உள்ளதா? என்று கேட்டதற்கு பதிலளிக்க ஓ.பி. பன்னீர் செல்வம் தரப்பு அவகாசம் கேட்டிருந்தது. இதையெடுத்து விசாரணையை வரும் 27ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வரும் 26ம் தேதி நடைபெறும் என்று கட்சித் தலைமை அறிவித்திருக்கிறது. போட்டியிட விரும்பமுள்ளோர் இன்றும் நாளையும் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். இன்று காலை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்திற்கு வரவிருக்கும் எடப்பாடி, வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

அ.தி.மு.க. சட்ட திட்ட விதி 20 (அ) பிரிவு 2-ல் குறிப்பிட்டபடி, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார் என்னும் விதிமுறைக்கு ஏற்ப, தேர்த நடைபெற இருக்கிறது. அடுத்த வாரம் ஞாயிறு அன்று வாக்குப் பதிவு நடைபெறவிருக்கிறது. போட்டியிட விரும்பும் கட்சி தொண்டர்கள் தலைமைக் கழகத்தில் 25 ஆயிரம் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற முறை பொதுக்குழு நடந்த அதே நேரத்தில் கட்சித் தலைமை அலுவலகத்திற்குள் அடையாளம் தெரியாதவர்கள் உள்ளே நுழைந்து, அங்கிருந்த பொருட்களை அடித்து சேதப்படுத்தினார்கள். அப்படியொரு சம்பவம் நடைபெறாமல் தடுப்பதற்காக சில முன்னேற்பாடுகளையும் அ.தி.மு.க தலைமை கழக நிர்வாகிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

கட்சித் தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பு கேட்டு ராயப்பேட்டை காவல்நிலையத்தில் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கட்சிக்கு எதிரானவர்கள், சமூக விரோதிகளின் அச்சுறுத்தல் உள்ளதால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஆனால், எடப்பாடி தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு தயாராக இல்லை.

சிறைக்கு சென்று வந்த பின்னர் கழக பொதுச்செயலாளராக தன்னை குறிப்பிடும் சசிகலா, பொதுச்செயலாளர் தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் செய்வாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. ஒருவேளை இன்றோ, நாளையோ ராயப்போட்டை தலைமை அலுவலகத்திற்கு நேரில் வர சசிகலா முடிவெடுத்தால், தமிழக அரசியல் பரபரப்பாகிவிடும் என்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com