அன்னையர்களின் பாசப் போராட்டம்.

அன்னையர்களின் பாசப் போராட்டம்.
Published on

ந்தக் காலத்தில் பத்துப் பிள்ளைகளை பெறுவதும் அவர்களை நெருங்கிய உறவினர்கள் வளர்ப்பதும் சகஜமாக இருந்தது. ஆனால் அறிவியல் முன்னேறி குழந்தைப் பிறப்பு என்பதில் பாதிப்பும், அதனால் தம்பதியினரிடையே பிரச்சினைகளும் எழுவது தற்போது அதிகமாகி விட்டது. குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் மருத்துவ உதவியுடன் பல்வேறு வழிகளில் தங்களுக்கு குழந்தை பெற முயற்சிப்பதும் அதில் வெற்றி பெற்று குழந்தையுடன் மகிழ்பவர்களும் உண்டு. குழந்தைக்காக ஏங்குபவர்கள் ஒரு பக்கம் எனில் அதிகமாக குழந்தை களைப் பெற்று அவர்களை வளர்க்க முடியாமல் தவிப்பவர்கள் ஒரு பக்கம். இப்படி இருப்பவர்கள் தங்கள் மனதைக் கல்லாக்கிக் கொண்டு  குழந்தை இல்லாத தம்பதிக்கு தங்கள் குழந்தையை தத்து தருவதும் உண்டு. அப்போதெல்லாம் நம்பிக்கையின் பெயரில் தத்துத் தருவது நடைமுறையில் இருந்தது. தற்போது சட்டத்தின் மேற்பார்வையில் தத்து எடுப்பவர்கள் முறையான அனுமதி பெற வேண்டியது அவசியமாகிறது.

     இப்படி தத்துக் கொடுத்து விட்டாலும் குழந்தை மீதான பாசம் பெற்ற தாய்களுக்கு இல்லாமல் போகுமா? கண்டிப்பாக பாசம் இருக்கும் என்பதற்கு சான்றுதான் இந்த நிகழ்வு.


     தத்து கொடுத்த மூன்றாவது குழந்தையைக் கேட்டு தாய் காவல்நிலையம் நாடி  பாசப்போராட்டம் நடத்தியுள்ளார் ஒரு தாய். ஒரு மாதம் வளர்த்த நிலையில் பெண் குழந்தையைப் பிரிந்து கண்ணீர் சிந்தினார் தத்தெடுத்த தாய். தாரமங்கலம் அருகே சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மனைவி பிரியா. இவர்களுக்கு ஏற்கனேவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில்  பிரியா மூன்றாவதாக கர்ப்பமாகி மீண்டும் பெண் குழந்தையை பெற்றார்.

      உறவினர் ஒருவர் பழனிசாமி, பிரியா தம்பதியிடம் மூன்று பெண் குழந்தைகளையும் வளர்க்க மிகவும் சிரமமாக இருக்கும் என்றும்  குழந்தை இல்லாதவர் களுக்கு தத்துக் கொடுத்தால் அவர்கள் குழந்தையை நன்றாக வளர்த்துக் கொள்வார்கள் என்றும் ஆலோசனை தந்துள்ளார்.

      முதலில் தயங்கிய கணவனும் மனைவியும் பின்னர் தங்கள் நிலையை எண்ணி குழந்தையாவது மகிழ்ச்சியாக வளர வேண்டும் என்ற ஆவலில் தத்து கொடுக்க சம்மதித்தனர். அதன்படி சேலம் அரியாகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த திருமணம் ஆகி  25 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாத சீனிவாசன் கனகரத்தினம் தம்பதிக்கு அந்தப் பெண் குழந்தையை தத்து கொடுத்தனர்.

      முறையாக வழக்கறிஞர் ஒருவரது ஆலோசனைப்படி  நோட்டரி பப்ளிக் ஒருவரிடம் எழுதி கொடுத்து குழந்தையை பெற்றுக் கொண்டதாகத் தெரிகிறது. தத்து கொடுத்து ஒரு மாதம் ஆகிய நிலையில் மூன்றாவது குழந்தையைப் பிரிந்து பிரியாவால் இருக்க முடியவில்லை. அவர்களிடம் சென்று தன்னுடைய குழந்தையைத் தருமாறு கேட்டுள்ளார். பின்னர் கணவனும் மனைவியும் சேர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் முறையிட்டுள்ளனர்.

     அவர் தந்த ஆலோசனையின் பேரில் தாரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு பழனிசாமியும் பிரியாவும் வந்தனர். குழந்தையை தத்து வாங்கிய தம்பதியிடம் தம்பதியும் அங்கு வந்தனர். அவர்களிடம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராஜ்குமார் போலீஸ் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன்படி குழந்தையை அதன் தாய் பிரியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

     தன் குழந்தையைப்  பெற்றுக்கொள்ள அங்குமிங்கும் அலைந்து போராட்டம் நடத்திய தாயை கண்டு அங்கு இருந்தவர்கள் நெகழ்ந்தனர். அதே சமயம் தங்கள் வேதனைக்கு தீர்வாக, வரமாக வந்த ஒரு மாதம் வளர்த்த குழந்தையைப் பிரிய மனமில்லாமல் கண்ணீர் விட்டு அழுதபடி சென்ற ஒரு மாத வளர்ப்புத்தாயின் அழுகையும் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்தது.

       மழலை பாக்கியம் என்பது மகத்தானது என்பதை அந்த இரு தாய்களும் உணர்த்திச் சென்றது நெகிழ்வானது. என்றாலும் தத்து கொடுப்பதற்கு முன் நன்கு யோசித்து, குடும்பத்தினருடன் ஆலோசித்து மனஉறுதியுடன் தருவதே இரு பக்கமும் நல்லது  என்பது இந்த சம்பவத்திலிருந்து புரிகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com