டெல்லியில் அக்டோபர் 1 ம் தேதியன்று இந்தியா மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் டெல்லி பிரகதி மைதானத்தில் 5ஜி சேவையைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.
தற்போது 5ஜி சேவை முதற்கட்டமாக டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட நான்கு நகரங்களில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. பின்னர், இந்த ஆண்டு இறுதிக்குள் பெங்களூரு, காந்தி நகர், சண்டிகர், அகமதாபாத், குருகிராம், புனே, ஹைதராபாத், ஜாம்நகர் மற்றும் லக்னோ போன்ற முக்கிய மெட்ரோ நகரங்களில் பயன்பாட்டிற்கு வரும். இதைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குள் இந்தியா முழுவதும் அனைவரும் பயன்படுத்தும் வகையில் இந்த அதிவேக 5ஜி சேவை நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4G யை விட பல மடங்கு அதிவேகம் கொண்ட 5G க்கான ஏலம் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்றது. இந்த ஏலத்தில் பாரத் ஏர்டெல், வோடஃபோன், ரிலையன்ஸ் ஜியோ, மற்றும் கெளதம் அதானியின் அதானி என்டா்பிரைசஸ் போன்ற 4 முக்கிய நிறுவனங்கள் கலந்து கொண்டன. இதில் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.88,078 கோடிக்கு ஸ்பெக்ட்ரம் வாங்கியுள்ளது. ஏர்டெல் ரூ.43,084 கோடிக்கும், வோடஃபோன் ரூ.18,784 கோடிக்கும், அதானி டேட்டா நெட்வொர்க் ரூ.212 கோடிக்கும் ஏலம் எடுத்துள்ளது.
இதையடுத்து ஜியோ நிறுவனம் வரும் தீபாவளி முதல் 5ஜி சேவையை இந்தியாவின் முக்கிய நகரங்களில் மட்டும் அறிமுகப்படுத்தவுள்ளது. இதைத் தெடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குள் இந்தியா முழுவதும் அனைவரும் பயன்படுத்தும் வகையில் 5ஜி சேவை நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது ரிலையன்ஸ் ஜியோவின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி 5ஜி சேவை குறித்து "5ஜி சேவையை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இந்தியா முழுவதும் இணைக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த 5ஜி சேவையை மலிவு விலையில் எல்லோரும் பயன்படுத்தும் வண்ணம் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம்" என்று கூறினார்.