

ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று நேற்று ஏற்ப்பட்டுள்ளது.இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். ஆப்கானிஸ்தானின் மசார்-இ-ஷெரிஃப் நகருக்கு அருகே இந்த நில நடுக்கம் 28 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகி உள்ளது. இதன் விளைவாக இந்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கட்டிடங்கள் நிலைகுலைந்து போயுள்ளன. இதுவரை 4 பேர் பலியாகியுள்ளதாகவும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு,நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஆப்கானிய அரசின் அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறுகின்றன.
நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ள மசார்-இ-ஷெரிஃப் நகரில் மட்டும் 5.23 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்டுள்ள சேதங்கள், உயிரிழப்புகள் ஆகியவைப் பற்றிய முழுமையான விவரங்களை அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை முகமை இன்னும் வெளியிடவில்லை.
தற்போது கிடைத்த தகவலின் படி, 20 பேர் உயிரிழந்துள்ளனர். 320 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் வகையில் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தால் மஸர்-இ ஷரிப்பில் உள்ள புகழ்பெற்ற புனிதத் தலமான ப்ளூ மசூதியின் ஒருபகுதி சேதமடைந்துள்ளது.
பெரிய புவித்தட்டுகள் சந்திக்கும் பகுதியில் ஆப்கானிஸ்தான் அமைந்துள்ளது எனவே, அடிக்கடி நிலநடுக்கங்களால் இந்த நாடு பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத நிலநடுக்கத்தால் ஆப்கானிஸ்தானில் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.