மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் மகாகும்பாபிஷேகம் குறித்தான செய்திகள் வந்துள்ளன. இதனால், தமிழகமே மகிழ்ச்சியில் உள்ளது.
மதுரை என்றால் மீனாட்சி அம்மன் கோவில்தான் பலருக்கும் ஞாபகம் வரும். தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க சுற்றுலா தளமாக உள்ளதால், வெளிநாட்டவர்கள் அதிகம் வரும் ஒரு கோவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில். கலை நுட்பங்களில் பெயர்ப்போன இந்த கோவிலின் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெறவுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வரலாற்றுப் புகழ்மிக்க கும்பாபிஷேகம், 17 ஆண்டுகளுக்குப் பிறகு, 2026 ஜனவரி 26-ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து திருப்பணிகளையும் திட்டமிட்டு, உரிய நேரத்திற்குள் முடிக்குமாறு கோயில் நிர்வாகத்துக்கு அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
கடைசியாக மீனாட்சி அம்மன் கோவிலின் கும்பாபிஷேகம் 2009ம் ஆண்டு நடைபெற்றது. இதன்பிறகு 2021ம் ஆண்டு நடத்தலாம் எனக் கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.
விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். அந்தவகையில் 2021ம் ஆண்டே நடைபெற்றிருக்க வேண்டியது. 2018-ஆம் ஆண்டில் கோயிலின் முக்கியமான பகுதியான வீரவசந்தராயர் மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது. மண்டபம் முற்றிலும் சேதமடைந்ததால், அதனை சீரமைக்கும் பணிகள் தாமதமாகின.
இந்த மண்டபத்தை மட்டும் தவிர்த்து கும்பாபிஷேகம் நடத்துவதில் கோவில் நிர்வாகத்திற்கும் அறநிலை துறைக்கும் உடன்பாடு இல்லை. ஆகையால், கும்பாபிஷேகம் தேதி தள்ளிப்போனது.
மேலும் இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெறாதது குறித்து சட்டசபையில் கேள்வி எழுப்பபட்டது. அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு ஆண்டுகளில் கோவில் பணிகள் முடிந்துவிடும். அதன்பின்னர் கட்டாயம் கும்பாபிஷேகம் நடக்கும் என்று உறுதியளித்தார். இதனையடுத்து பணிகள் மும்முரமாக நடைபெற்றன.
கும்பாபிஷேகத்துக்கான் நிதி ஒதுக்கீடு பயன்படுத்தி நான்கு முக்கிய கோபுரங்களின் சீரமைப்பு பணிகள் ஸ்பான்சர்களின் உதவியுடன் முன்னேறி வருகின்றன. இதர திருப்பணிகளுக்காக அரசால் ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கற்களை வெட்டும் பணிகளுக்காக ரூ.6.40 கோடி, மண்டபத்தை வடிவமைப்பதற்காக ரூ.11.70 கோடி செலவாகின. மேலும் மன்னர்கள் காலத்தின் நுட்பத்துடன் செதுக்கப்பட்ட கற்கள், நாமக்கல் அருகே களரம்பள்ளியில் வெட்டப்பட்டு, மதுரைக்கு கொண்டு வரப்பட்டு, செங்குளம் பகுதியில் வடிவமைக்கப்பட்டு கோயிலில் பொருத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.