20 ஆண்டுகளுக்குப் பிறகு அருள்வாக்கு கொடுத்த காளை மாடு!

20 ஆண்டுகளுக்குப் பிறகு அருள்வாக்கு கொடுத்த காளை மாடு!

வேலூர் அருகே உள்ள கிராமத்தில் காளைமாடு ஒன்று அருள்வாக்கு சொன்னதால் 20 வருடங்களுக்குப் பின் 47 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மக்கள் ஒன்று கூடி திருவிழா நடத்தியுள்ளனர்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே சுமார் 84 மலைக்கிராமங்கள் உள்ளது. இதில் ஓடுகத்தூர் அடுத்த பீஞ்சமெத்தை ஊராட்சிக்கு உட்பட்டு 47 குக்கிராமங்கள் உள்ளன. இவற்றில் கட்டியான், அரசன், கோரி தாண்டன், வரடியான், பாவிரன், நாடான்  உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மலைவாழ் மக்கள்  வாழ்ந்து வருகின்றனர். இவற்றில் ஜமுனாமரத்தூர் மலை கிராமத்தை பூர்வீகமாக கொண்ட மலைவாழ்மக்கள் பஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட கட்டியாப்பட்டு கிராமத்தில் சுயமாக அமைந்துள்ள பெருமாள் வடிவிலான புற்றை பெருமாள் அம்சமாக தங்களின் முதல் கடவுளாக தொன்று தொட்டு வழிபட்டு வருகின்றனர்.

இந்தக் கோவிலில் பூஜை செய்யும் நபருக்கு அருள் வந்து அப்போது அவர் கூறும் ஊரில் உள்ள ஏதேனும் ஒரு காளைக்கும் ஒரே நேரத்தில் சாமி வந்து அருள்வாக்கு சொன்னால் மட்டுமே திருவிழா நடைபெறும். இல்லையெனில் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திருவிழா நடைபெறாது.

அதன்படி கடந்த 2003ம் ஆண்டுக்கு பிறகு, 20 ஆண்டுகளுக்குப் பின் தற்போது காளையிடம் இருந்து உத்தரவு கிடைத்துள்ளதால், மீண்டும் திருவிழா களை கட்டியுள்ளது. 48  நாட்களுக்கு முன் காளையிடம் அருள்வாக்கு கேட்டு தேதி குறிக்கப்பட்டது.     

தேதி குறிக்கப்பட்டதும் அந்தக் காளையை அலங்கரித்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு கொண்டு சென்று சிறப்பு பூஜை செய்யப்படும். தொடர்ந்து 44 பேர் ஏழு நாட்களாக 47 குக்கிராமங்களுக்கு சென்று திருவிழா நடத்தத் தேவையான காணிக்கைகளை திரட்டினர். பின்னர் ஒடுகத்தூர் அடுத்த கட்டியாப்பட்டு மலை கிராமத்தில் 20 ஆண்டுகள் கழித்து நேற்று முன் தினம் நள்ளிரவில் பெருமாள் கோவில் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

சுயம்புவாக எழுந்தருளி இருக்கும் புற்றுக்கும் வண்ண மலர்களால் அலங்கரித்து சுவாமிக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அப்போது 48 நாள் விரதம் இருந்து காப்பு கட்டியவர்கள் பொங்கல் வைத்தும் மாவிளக்கு எடுத்தும் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர். அருள்வாக்கு காளைக்கும் படையலிட்டு மக்கள் வாக்கு கேட்டனர். விழாவில் 2000-க்கும் மேற்பட்ட கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com