இந்த ஆண்டு தைப்பூச விழாவினால் பெருமகிழ்ச்சி அடைந்தவர்கள் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மக்கள்தான். இருக்காதா பின்ன? ஒன்றல்ல இரண்டல்ல 51 வருடங்கள் தடைபட்டிருந்த விழா நடந்தால் கோலாகலம்தானே பகதர்களுக்கு? அதைப் பற்றிய செய்திதான் இது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் 50 வருடங் களுக்கு முன்பு வரை தவறாமல் நடைபெற்று வந்த தைப்பூசத்திருவிழா தேரோட்டம் அப்போது எழுந்த பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தைப்பூசம் தங்கள் ஊரிலும் தேரோட்டத்துடன் நடைபெற வேண்டும் என்று நீண்ட காலமாக அந்த ஊர் பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்து அறிந்த நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா அக்கோரிக்கைக்கு முக்கியத்துவம் அளித்து பக்தர்களின் கோரிக்கையை அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
இதனை அடுத்து தமிழக அரசு அறிவுறுத்தலின்படி திருச்செங்கோட்டில் தைப்பூச தேர் திருவிழா நடத்துவது குறித்து பொதுமக்கள் கருத்துக்களை அறிய கூட்டம் நடத்தி மக்களின் ஏகோபித்த சம்மதத்துடன் அறநிலையத் துறை சார்பாக தைப்பூச தேரோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய விழா 10 நாட்கள் நடைபெற ஏற்பாடுகள் நடைபெற்றன.
இத்திருவிழாவில் 22 கட்டளைதாரர்களின் மண்டப கட்டளையுடன் தினம் சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக ஆறுமுகசாமி திருக் கல்யாண நிகழ்ச்சியும், தொடர்ந்து நேற்று காலை விநாயகர், ஆறுமுகசாமி அலங்காரத் தேர் மற்றும் மாலை கைலாசநாதர் சுந்தராம்பிகை சோமாஸ்கந்தர் ஆகிய தெய்வங்கள் சிறப்பலங்காரத் தேர்கள் வலம் வந்தன. முக்கியப் பிரமுகர்கள் துவங்கி வைக்க பொது மக்களால் வடம் பிடித்து இழுத்து சிறப்பாக தேரோட்டம் நடந்தது .
விழாவில் பூங்கரகம், காவடி ஆட்டம், சிவன் பார்வதி ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் மேளதாளம் முழங்க பக்தர்கள் ஆடியபடி வந்தனர். நான்கு ரத வீதிகள் வழியாக இழுக்கப்பட்ட தேர் நிலை சேர்க்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரர் கோவில் அதிகாரிகள் செய்திருந்தனர். திருச்செங்கோடு மற்றும் சுற்று வட்டார ஊர்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்ல வசதியாக பேருந்து மற்றும் இதர வசதிகள் செய்யப்பட்டு பெருவாரியான மக்கள் கூடி பல ஆண்டுகள் கழித்து தைப்பூசம் விழா நடத்தியது சிறப்பு.