

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், கோவையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அதிரடியான பல அரசியல் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். தமிழகத்தில் தற்போதுள்ள இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளும் வேண்டாம், புதியதொரு கட்சிதான் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே, குறிப்பாக இளைஞர்களிடையே மேலோங்கி இருப்பதாக அவர் குறிப்பிட்டார். வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் முதலிடத்தைப் பிடித்து ஆட்சி அமைப்பது உறுதி என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அ.தி.மு.க மற்றும் தி.மு.க ஆகிய இரு கட்சிகளும் ரகசிய உடன்படிக்கை வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டிய செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி நீண்ட காலம் அ.தி.மு.க பொதுச்செயலாளராக இருந்தால் தி.மு.க-விற்கு வெற்றி சுலபம் என உதயநிதி ஸ்டாலின் கூறுவதன் மூலம், இருவரும் ஒன்றாகச் செயல்படுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக விமர்சித்தார். மேலும், அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான தற்போதைய அறிவிப்புகள் அனைத்தும் வெறும் தேர்தல் காலக் கண்துடைப்பு என்றும், மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சி என்றும் அவர் சாடினார்.
த.வெ.க-வின் பலம் குறித்துப் பேசிய அவர், வரும் பொங்கல் பண்டிகைக்குள் அ.தி.மு.க-விலிருந்து எத்தனை முக்கிய நிர்வாகிகள் விஜய்யுடன் இணைவார்கள் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் சேருவர், அதாவது, த.வெ.க தலைமையிலான கூட்டணியில் இடம்பெறுவார்கள் என கூறினார். எம்.ஜி.ஆருக்குப் பிறகு மக்கள் எதிர்பார்க்கும் அந்த வெற்றிடத்தை நிரப்பக்கூடிய ஒரே தலைவர் விஜய் தான் என்றார்.
இறுதியாக, விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் மற்றும் அதன் மலேசிய இசை வெளியீட்டு விழா குறித்துப் பேசிய அவர், மலேசிய மண்ணில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வகையில் நடந்த 'ரோடு ஷோ' உலக வரலாற்றில் புதிய இடத்தைப் பிடித்துள்ளதாகப் பெருமிதம் தெரிவித்தார். ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் விஜய்க்கு வாக்களிக்குமாறு வலியுறுத்தி வருவதாகவும், 'ஜனநாயகன்' திரைப்படம் மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் அமையும் என்றும் செங்கோட்டையன் கூறினார்.