நாடாளுமன்றத்தில் மறுபடியும் அமளி, ஒத்தி வைப்பு - தொடர்கதையாகிப் போன போராட்டங்கள்!

நாடாளுமன்றத்தில் மறுபடியும் அமளி, ஒத்தி வைப்பு - தொடர்கதையாகிப் போன போராட்டங்கள்!

அதானி விவகாரம், நாடாளுமன்ற கூட்டத் தொடரை தொடர்ந்து முடக்கி வருகிறது. நேற்று மகாவீர் ஜெயந்தியைத் தொடர்ந்து விடுமுறை என்பதால் இன்று காலை 11 மணிக்கு சபை கூடியது. காங்கிரஸ் உறுப்பினர்கள் மட்டுமல்ல, திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்களும் கருப்பு உடையை அணிந்து வந்திருந்தார்கள்.

அதானி பங்குகள் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரி எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டன. மாநிலங்களவை தினத்தையொட்டி, எம்.பி.க்களுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன. அமளியில் ஈடுபடாமல், ஆரோக்கியமான விவாதத்தில் பங்கேற்குமாறு அவைத்தலைவர் கேட்டுக் கொண்டார்.

ராகுல் காந்தியின் எம்பி தகுதி நீக்கம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளும் ஒத்திகைப்பட்டன. காலை 11 மணிக்கு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஒத்தி வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அதானி பங்குச்சந்தை முறைகேடு புகாரில் கூட்டுக்குழு விசாரணை கோரி வலியுறுத்தியும், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் லண்டனில் ராகுல் காந்தி பேசியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பினார்கள்.

நாடாளுமன்ற கூட்டக்குழு அமைப்பதில் என்ன தவறு? லண்டனில் ராகுல் காந்தி தனிப்பட்ட அளவில் பேசிய பேச்சுக்கு ஏன் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு கிளம்ப வேண்டும் என்றெல்லாம் அரசுக்கெதிராக காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகள் அணிவகுக்கின்றன. எப்போதுமில்லாத அளவுக்கு மத்திய அரசு, எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்க மறுத்து பிடிவாதம் காட்டி வருகிறது.

இந்நிலையில் அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து ராகுல்காந்தி நேற்று முன்தினம் சூரத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். பின்னர் டெல்லி திரும்பிய ராகுல் காந்தி, பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். கட்சித் தலைவர்கள் புடைசூழ சூரத் நீதிமன்றம் சென்றது, நீதித்துறைக்கு அழுத்தம் தரும் முயற்சி என்று பா.ஜனதா சொல்வது பற்றி கருத்துக் கேட்ட பத்திரிக்கையாளரை கடிந்து கொண்டார்.

அதானியின் போலி கம்பெனிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள ரூ.20 ஆயிரம் கோடி, யாருடைய பணம்? அது பினாமி பணம். அந்த பணத்துக்கு சொந்தக்காரர் யார் என்று கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, இது குறித்து பிரதமர் மௌனம் சாதிப்பது ஏன் என்று கேள்வி கேளுங்கள் என்று பத்திரிக்கையாளர்களை கேட்டிருக்கிறார்.

இதற்கும் எதிர்வினை பா.ஜ.கவிடமிருந்து வந்திருககிறது. ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகைகளை ராகுல்காந்தி காயப்படுத்தியிருக்கிறார். பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும், ஊடகங்களையும் இழிவுபடுத்துவது அவரது வழக்கமாகிவிட்டது என்கிறார்கள். இது முடியவே முடியாத தொடர்கதைதான்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com