மிசோரம் மாநிலத்தின் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 78 வயது முதியவர் பள்ளிப்படிப்பை முடிக்க எதுவும் தடையாக இல்லை. லால்ரிங்தாரா என்ற பெயருடைய அவர், தினமும் பள்ளிச் சீருடை அணிந்து, புத்தக மூட்டைகளை சுமந்து 3 கிலோ மீட்டர் தூரம் நடைபயணமாக பள்ளி செல்கிறார்.
தொலைக்காட்சியில் வெளியான செய்தியின்படி லால்ரிங்தாரா, மிசோரத்தில் சம்பாய் மாவட்டம், ஹ்ருக்காவ்ன் கிராமத்தைச் சேர்ந்தவர். இப்போது இவர் பலருக்கு வழிகாட்டியாக இருக்கிறார். ஹ்ருக்காவ்ன் கிராமத்தில் உள்ள ராஷ்ட்ரீய மத்யமிக் சிக்ஷா அபியான் உயர்நிலைப் பள்ளியில் நடப்பு கல்வி ஆண்டில் அவர் 9 ஆம் வகுப்பில் சேர்ந்துள்ளார்.
இந்தோ-மியான்மர் எல்லைப் பகுதிக்கு அருகில் உள்ள குவாங்லெங் கிராமத்தில் 1945 ஆம் ஆண்டு பிறந்த லால்ரிங்தாரா, தந்தையின் மரணம் காரணமாக 2 ஆம் வகுப்புக்கு மேல் கல்விப் படிப்பை தொடர முடியவில்லை. வீட்டில் ஒரே குழந்தையாக இருந்ததால் வயலில் வேலை செய்யும் தாய் ஜும்முக்கு உதவிகரமாக இருந்துள்ளார்.
ஒவ்வொரு இடமாக மாறி முடிவில் 1995 ஆம் ஆண்டு நியூ ஹ்ருக்காவ்ன் கிராமத்தில் குடியேறினார் லால்ரிங்தாரா. வறுமை காரணமாக அவரது பள்ளி வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அவர், தனது ஆங்கில அறிவை மேம்படுத்த விரும்பியதால் பள்ளிக்குச் சென்றார். ஆங்கிலத்தில் விண்ணப்பங்களை எழுதுவது மற்றும் தொலைக்காட்சியில் செய்திகளைப் புரிந்துகொள்வது ஆகியவைதான் அவரது முக்கிய குறிக்கோளாகும்
லால்ரிங்தாராவுக்கு மிசோரம் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரியும். அவர், தற்போது நியூ ஹ்ருக்காவ்ன் பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தில் பாதுகாப்பு காவலாளியாக பணியாற்றி வருகிறார்.
“எனக்கு மிஜோரம் மொழியை படிப்பதிலோ அல்லது எழுதுவதிலோ எந்த பிரச்னையும் இல்லை. எனினும் ஆங்கிலம் கற்க வேண்டும் என்ற ஆசை எனது மனதில் நீண்டநாளாக இருந்து வந்த்து. இப்போது வெளியாகும் இலக்கியங்களில் எல்லாம் ஒரிரு ஆங்கில வார்த்தைகளும் புகுத்தப்படுகின்றன. இதனால் எனக்கு அடிக்கடி குழப்பம் ஏற்படுகிறது. எனவேதான் பள்ளிக்குச் சென்று படித்து எனது ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள ஆசைப்பட்டேன்” என்கிறார் லால்ரிங்தாரா.
நியூ ஹ்ருக்காவ்ன் பள்ளியின் தலைமை ஆசிரியர் வன்லால்கிமா கூறுகையில், லால்ரிங்தாரா மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருப்பதுடன் இங்கு பயிலும் மாணவர்களுக்கும் சவாலாக இருக்கிறார். கற்றலில் ஆர்வம் உள்ள அவர் அனைத்து ஆதரவையும் பெற தகுதியானவர் என்று பெருமையுடன் குறிப்பிட்டார்.