குறையாத அக்னி நட்சத்திர வெய்யில் - வழக்கமான வெப்பநிலைதான் என்கிறது சென்னை வானிலை ஆய்வு மையம்!

குறையாத அக்னி நட்சத்திர வெய்யில் - வழக்கமான வெப்பநிலைதான் என்கிறது சென்னை வானிலை ஆய்வு மையம்!
Published on

ஒருவழியாக அக்னி நட்சத்திரம் நிறைவடைந்தாலும் மாநிலத்தின் பல பகுதிகளில் வெப்பநிலை 105 டிகிரியை தாண்டி பதிவாகிறது. இந்நிலையில் இம்முறை கோடையில் இயல்பான வெப்பநிலைதான் இருந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

நடப்பாண்டின் கோடை வெப்பம், மார்ச் தொடங்கி தொடர்ந்து அதிகரித்தபடி வந்தது. மார்ச் மாத இறுதி வாரங்களிலேயே 100 டிகிரியை தொட்டுவிட்டது. ஆனாலும், அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பாக தமிழகம் முழுவதும் பெய்த மழையின் காரணமாக கோடை வெப்பம் தணிந்து காணப்பட்டது.

அக்னிநட்சத்திரம் முடிவடையும் நேரத்தில் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்தது. அக்னி நட்சத்திரம் நிறைவடைந்தாலும் வெப்பநிலையில் மாற்றமில்லை. ஜீன் மாதம் இறுதிவரை இதே நிலை தொடரும் என்று தெரிகிறது. தென்மேற்கு பருவக்காற்றினால் வரும் மழை தொடங்கினால் வெப்பம் தணியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் முதல் மே மாத காலகட்டத்தில் தமிழ்நாட்டின் வெப்பநிலை நார்மலாக இருந்ததாக சென்னை வானிலை மையத்தின் இயக்குநர் எஸ். பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் 60 சதவீத வானிலை மையங்களில் வழக்கமான வெப்பநிலை மட்டுமே பதிவாகியிருபபதாகவும், சில இடங்களில் மட்டுமே ஒரு டிகிரி முதல் இரண்டரை டிகிரி வரை வெப்பநிலை உயர்ந்திருப்பதாக உறுதிப்படுத்தியிருக்கிறார்.

பெரும்பாலான மாவட்டங்களில் வெப்பநிலை சராசரியாக 33 முதல் 38 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியிருக்கிறது. மே மாதத்தில் வேலூரில்தான் அதிகபட்சம் வெப்பநிலையாக சராசரியாக 38.3 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியிருக்கிறது. வேலூருக்கு அடுத்தபடியாக மீனம்பாக்கத்தில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியிருக்கிறது.

அடுத்து வரும் மூன்று நாட்களுக்கான வானிலை நிலவரம் குறித்தும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கேரள - கர்நாடக கடலோரப் பகுதிகள், இலட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எது எப்படியோ, தமிழ்நாட்டின் வெப்பநிலை சகஜ நிலைக்குத் திரும்ப இரண்டு வாரங்களாகிவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com