விடைபெறுகிறது அக்னி நட்சத்திரம்: இனியாவது வெயிலின் தாக்கம் குறையுமா?

விடைபெறுகிறது அக்னி நட்சத்திரம்: இனியாவது  வெயிலின் தாக்கம் குறையுமா?

தமிழ்நாட்டில் கத்தரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. அப்போது வெயில் அதன் கோரத் தாண்டவத்தை காட்டத் தொடங்கியது. அதிலும் அக்னி நட்சத்திரத்தின் பிற்பகுதியில் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியது. தமிழ்நாட்டில் சென்னை மீனம்பாக்கம் உள்பட 14 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வந்தது. இதனால் பகல் நேரத்தில் மக்கள் வீடுகளில் முடங்கும் நிலையும் ஏற்பட்டது.

இந்நிலையில் அக்னி நட்சத்திரம் இம்மாதம் 4-ஆம் தேதி தொடங்கி இன்றுடன் முடிவடைகிறது. தொடர்ந்து 24 நாட்களும் சூரியனின் கதிர்கள் நேரடியாக பூமி மீது விழுவதால் வெயில் கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதுபோன்றே மக்கள் வெயில் தாக்கத்தால் பெரும் அவதியடைந்து வந்தனர்.

இதற்கு பிறகாவது வெயிலின் தாக்கம் குறையுமா? என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். ஆனால் அக்னி நட்சத்திரம் விடைபெற்றாலும், தமிழ்நாட்டில் சில இடங்களில் இன்னும் ஒரு வார காலத்துக்கு வெயிலின் தாக்கம் இயல்பைவிட சற்று அதிகமாகவே இருக்கும் என்றும், இன்றும், நாளை செவ்வாய்க்கிழமையும் ஓரிரு இடங்களில் 100 டிகிரி முதல் 104 டிகிரி வரை வெயில் பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரத்தில் சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 109 டிகிரி வெயில் பதிவானது. இதுதான் இந்த ஆண்டின் அதிகபட்ச வெப்பப் பதிவாக தற்போது வரை இருந்து வருகிறது.

மாநிலத்திலேயே அதிகபட்சமாக திருத்தணியில் 112 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இதுதவிர வேலூர், திருச்சி, மதுரை, கரூரில் உள்ள பரமத்தி ஆகிய இடங்களில் வெப்பநிலை சதமடித்தது.

இந்த நிலையில் வாட்டி வதைத்து வந்த அக்னி நட்சத்திரம் இன்று திங்கட்கிழமையுடன் நிறைவு பெறுகிறது. மேலும் சில தினங்களுக்கு கடும் வெப்பம் நீடிக்கும் என்பதால், பள்ளி திறப்பு ஜூன் 7-ம் தேதிக்கு தள்ளி வைக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com