மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்று சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
1960-ம் ஆண்டு முதல் 1980ம் கால கட்டங்களில் இந்தியாவின் உணவுத்தேவைக்கு அண்டை நாடுகளிடம் கையேந்தக் கூடிய நிலையை மாற்ற வேண்டும் என்று திட்டமிடப்பட்டது. உணவுத் தேவையில் தன்னிறைவை பெறுவதற்காக பசுமைப் புரட்சி திட்டம் அமல்படுத்தப்பட்டது. இது இந்திய வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றது.
அப்போது மத்திய அரசு ஒவ்வொரு 5 ஆண்டுகால கட்டத்திலும் ஒவ்வொரு நோக்கங்களுக்காக திட்டங்கள் வகுத்து செயல்படுத்தியபோது உணவுத் தன்னிறைவை பெறுவதற்காக பசுமைப்புரட்சி என்ற இந்த திட்டம் வகுக்கப்பட்டது. அதனை முன்னெடுத்து சென்றவர் தமிழகத்தை சேர்ந்த பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன். அவர் அந்த பணிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலமும், அறக்கட்டளை மூலமாகவும், வேளாண்துறைக்கு பெரும் பங்காற்றினார்.
பசுமை புரட்சியின் தந்தை என புகழப்படும் எம்.எஸ்.சுவாமிநாதன் (98) வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திலும், தரமணியில் உள்ள அவரது ஆராய்ச்சி அறக்கட்டளையிலும் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற்றது. காவல்துறையினர் வாத்தியங்களை இசைத்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் 30 குண்டுகள் முழங்க வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. இதையடுத்து, எம்.எஸ்.சுவாமிநாதனின் மகள்கள் மற்றும் உறவினர்கள் பாரம்பரிய முறைப்படி இறுதிச்சடங்கு செய்த பின்னர், மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது. இந்த நிகழ்வில், கேரள அமைச்சர்களான கிருஷ்ணன் குட்டி, பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.