செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

மின்துறை ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு 6% வழங்க உடன்பாடு!

மின்துறை ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பான பேச்சு வார்த்தையில் ஆறு சதவீதம் ஊதிய உயர்வு வழங்குவது என உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வின் மூலம் 75 ஆயிரத்து 978 பணியாளர்கள் பயன் பெற உள்ளார்கள்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்துறை ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பாக பேச்சு வார்த்தை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைப்பெற்றது. நேற்று மாலை 5:00 மணி முதல் 9:00 மணி வரை பேச்சு நடத்தினார். அதில், மின் வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த பேச்சுவார்த்தையில் 19 மின்வாரிய தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேல் நடைப் பெற்ற பேச்சு வார்த்தையில், ஆறு சதவீதம் ஊதிய உயர்வு வழங்குவது என உடன்பாடு எட்டப்பட்டது.

மேலும் 10 வருடங்கள் பணி முடித்த ஊழியர்களுக்கும் மற்றும் அலுவலர்களுக்கும் பணி பலனாக மூன்று சதவீதம் ஊதிய உயர்வு வழங்குவது என உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் 62 ஆயிரத்து 548 பணியாளர்கள் பயன்பெறுவார்கள் என தெரிகிறது.

இந்த ஊதிய உயர்வின் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு 527 கோடியே 8 லட்சம் ரூபாய் கூடுதல் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய மொத்த நிலுவை தொகையான 516 கோடியே 71 லட்சம் ரூபாயும் வழங்குவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஊதிய உடன்பாடு ஏற்பட்டதையடுத்து திமுக தொழிற்சங்கமான தொ.மு.ச சார்பில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை சுமுகமாக அனைவரும் மகிழ்ச்சி அடையும் வகையில் முடிந்ததாக கூறியுள்ளார். இதற்கான உடன்பாடு, தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில், ஓரிரு நாளில் கையெழுத்தாகும் என தெரிவித்தார் .

பேச்சுவார்த்தை முடித்து வெளியே வந்த அமைச்சரிடம் பணி உறுதி செய்யப்படாத கேங்மேன் பணியாளர்கள் தங்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். அதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி முதலமைச்சர் நிச்சயம் நல்ல முடிவு எடுப்பார் என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com