கடந்த ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்தில், 241 பேர் உயிரிழந்த நிலையில், விபத்துக்கான காரணத்தைக் கண்டறியும் முயற்சியில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான ஏர் இந்தியா போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தின் 'கருப்பு பெட்டி' (Black Box) அமெரிக்காவிற்கு அனுப்பப்படவுள்ளது.
விமான விபத்து புலனாய்வுப் பிரிவினரால் (AAIB) மீட்கப்பட்ட கருப்பு பெட்டி, தீ விபத்து மற்றும் மோதலால் கடுமையாகச் சேதமடைந்துள்ளது. இதனால், இந்தியாவில் உள்ள ஆய்வகங்களில் இருந்து தரவுகளை மீட்டெடுப்பது சாத்தியமில்லை என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கருப்பு பெட்டியில் உள்ள டிஜிட்டல் ஃபிளைட் டேட்டா ரெக்கார்டர் (DFDR) மற்றும் காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் (CVR) ஆகியவற்றிலிருந்து தரவுகளைப் பிரித்தெடுப்பதற்காக, வாஷிங்டனில் உள்ள தேசிய பாதுகாப்பு போக்குவரத்து வாரியத்திற்கு (NTSB) அனுப்ப மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
இந்த விபத்து, அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, விமான நிலையம் அருகே உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதியின் மீது மோதி நிகழ்ந்தது. இந்த விபத்தில், விமானத்தில் பயணித்தவர்களில் ஒரே ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார்.
கருப்பு பெட்டியில் இருந்து கிடைக்கும் தகவல்கள், விமானத்தின் வேகம், உயரம், இயந்திர செயல்பாடு, விமானிகளின் உரையாடல்கள் போன்ற முக்கிய விவரங்களை வழங்கும். இவை விபத்துக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் கருப்பு பெட்டியுடன், இந்திய அதிகாரிகள் குழுவும் உடன் செல்லும் என்றும், தரவு மீட்புப் பணிகளில் பிரிட்டிஷ் விமான விபத்து விசாரணை கிளையும் (AAIB, UK) பங்குபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், விபத்துக்கான மர்மம் விரைவில் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.