

செயற்கை நுண்ணறிவு மூலம் நடக்கும் மோசடிகளை தடுப்பதற்காக மத்திய அரசு விரைவில் புதிய விதிகளை அமல்படுத்த உள்ளது .இதற்கு ஜோஹோ நிறுவனரும், தலைமை விஞ்ஞானியுமான ஸ்ரீதர் வேம்பு வரவேற்பு அளித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் புகைப்படங்கள் உண்மையானதா அல்லது செயற்கை நுண்ணறிவு மூலம் சித்தரிக்கப்பட்டதா என்பதை பொதுமக்களும், பயனாளர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் மத்திய அரசு கட்டுப்பாடுகளை கொண்டு வர உள்ளது. காரணம் இந்த தொழில்நுட்பத்தை சிலர் தவறாக பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் கூட 'எக்ஸ்' வலைதளத்தில் உள்ள 'க்ராக்' செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெண்களின் ஆபாசப் படங்களை சிலர் பதிவிட்டனர்.
உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருவதால் ஒரு புகைப்படத்தைக் கொடுத்து நமக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கும்படி ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவுக்கு 'பிராம்ட்' எனப்படும் உத்தரவு கொடுத்தால் போதும், சில நிமிடங்களில் நாம் எதிர்பார்த்த புகைப்படம் நமக்கு கிடைத்துவிடும். எக்ஸ் வலைதள நிறுவனர் எலான் மஸ்க்குக்கு இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகளிடமிருந்து இது பற்றி புகார் அளிக்கப்பட்டது. 'க்ராக்' வழியாக நடக்கும் மோசடிகளை உடனடியாக தடுத்து நிறுத்தா விட்டால் விபரீதம் ஏற்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.
இதனால் மத்திய அரசு சில கட்டுப்பாடுகளை கொண்டு வர உள்ளது. அதன்படி செயற்கை நுண்ணறிவு புகைப்படம் என்றால் அதற்கான முத்திரையை கட்டாயம் அதில் பதிய வேண்டும் என்ற விதி அமலாக உள்ளது. இதன் மூலம் பொதுமக்களிடம் பொய்யான தகவல்கள் பரப்பப்படுவது கட்டுப்படுத்தப்படும். அத்துடன் செயற்கை நுண்ணறிவு புகைப்படங்களை பயன்படுத்துவதற்கான வரைவு விதிகள் தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஜோஹோ நிறுவனரும், தலைமை விஞ்ஞானியுமான ஸ்ரீதர் வேம்பு மத்திய அரசின் இந்த முடிவுக்கு வரவேற்பு அளித்துள்ளார். அத்துடன் இந்த கட்டுப்பாடு மிகவும் அவசியம் என்றும், இதனால் பலர் பாதிக்கப்படுகின்றனர் என்றும், மத்திய அரசு கொண்டுவரப்போகும் இந்த விதிகளால் தவறான தகவல்கள் பரப்பப்படுவது கட்டுப்படுத்தப்படுவதுடன், மக்கள் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் பாதிக்கப்படுவதும் குறையும் என்றும் கூறிய அவர், மத்திய அரசு கொண்டு வரவுள்ள விதிகளுக்கு வரவேற்பு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.