கடந்த 2015ம் ஆண்டு எந்த முன்னறிவிப்பும் இன்றி செம்பரபாக்கம் ஏரியை திறந்துவிட்டதால் 289 பேர் பலியாகினர். இத்தனை சாவுக்கும் அதிமுகதான் காரணம் என்று பேசியுள்ளார்.
மழைக்காலம் ஆரம்பித்துவிட்டது. சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சென்னையில் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் மழை பெய்து ஆங்காங்கே வெள்ளம் சூழ்ந்திருக்கிறது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஏற்கனவே தமிழக அரசு எடுத்துள்ளது. இந்தநிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை சரியாக மேற்கொள்ள வில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கு கே.என்.நேரு பதில் அளித்திருக்கிறார். “அதிமுக ஆட்சிக் காலத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரியாக மேற்கொள்ளாததோடு, எந்த முன்னெச்சரிக்கையும் இன்றி செம்பரபாக்கம் ஏரியை திறந்துவிட்டு 289 பேர் பலியாகினர்.
இதையெல்லாம் மறந்துவிட்டு தற்போது தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கொச்சைப்படுத்துவதா.? முதலமைச்சர் ஸ்டாலின் மீட்பு பணிகளில் ஈடுபடாமல் ஆலோசனை கூட்டம் நடத்துவதாக வாய் புளித்ததோ அல்லது மாங்காய் புளித்ததோ என்று எதிர்க்கட்சித் தலைவர் உளறிக் கொண்டிருக்கிறார்.
பருவ மழையை எதிர் கொள்ள முறையான செயல்திட்டத்தினை மாவட்ட நிர்வாகம் உருவாக்க வேண்டும். உயிரிழப்புகளை தடுக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அன்றைக்கு முதல்-அமைச்சர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கோவை, திருப்பூர், புதுக்கோட்டை, சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்திருந்தாலும் பெரிய பாதிப்புகள் ஏற்படாமல் மக்கள் பாதுகாக்கப்பட்டனர். அந்த மாவட்டங்களுக்குத் தேவையான நிவாரண உதவிகள், மீட்புப் பணிகள் செய்வது தொடர்பாக கலெக்டர்களுக்கு முதலமைச்சர் கட்டளைகளை பிறப்பித்தார்.
இதன்மூலம் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பத்திரிக்கையோ அல்லது தொலைக்காட்சியையோ பார்ப்பதில்லை என்று அவரது அறிக்கையின் மூலமே தெரியவருகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு மொத்தமாக ஏரி நீரை திறந்து விட்டு 289 பேர் பலியாக காரணமாக இருந்தவர்கள் தற்போது பருவமழை முன்னேற்றத்தை நடவடிக்கைகள் குறித்து விமர்சிப்பது சாத்தான் வேதம் ஓதுவது போன்று உள்ளது. அப்போது நடைபெற்ற வெள்ள பாதிப்புக்கு மனித தவறே காரணம். மேலும் பருவ மழை ஆலோசனை கூட்டம் எதற்காக என்று கேட்கும் எதிர்க்கட்சித் தலைவரை பார்த்து பொதுமக்கள் சிரிக்க தான் செய்வார்கள்.” என்று பேசியுள்ளார்.