அதிமுக தலைமை – நீதிமன்ற தீர்ப்பு – சிக்கலில் ஓபிஎஸ் மாநாடு!

அதிமுக தலைமை – நீதிமன்ற தீர்ப்பு – சிக்கலில் ஓபிஎஸ் மாநாடு!
Published on

திருச்சியில் வரும் 24ம் தேதி பிரம்மாண்ட மாநாடு ஒன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தார் ஓ.பன்னீர்செல்வம். அதையடுத்து, திருச்சி பொன்மலையில் உள்ள ஜி கார்னர் மைதானத்தில் மாநாட்டை நடத்துவதற்கான பணிகளை ஓபிஎஸ் அணியினர் மேற்கொண்டு வந்தனர். மாநாட்டுக்கான கால்கோள் நாட்டும் விழா இன்று நடைபெற்றது. இதில் வெல்லமண்டி நடராஜன், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்ட ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். ‘இந்த மாநாட்டுக்கு லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் வருவார்கள். திருச்சியில் நடைபெறும் மாநாட்டுக்குப் பிறகு எடப்பாடி தரப்பினர் காணாமல் போய்விடுவார்கள். திருச்சி மாநாடு ஓ.பன்னீர்செல்வத்துக்குத் திருப்புமுனையாக அமையும்’ என்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தெரிவித்து வந்த நிலையில், இன்று தேர்தல் ஆணையம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் என முடிவாக அங்கீகரித்துள்ளது.

இதனால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையமும் முறைப்படி அங்கீகரித்துள்ளது. இந்த அங்கீகாரத்தால் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்துள்ளது. இதனால், ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதோடு, தனது அரசியல் நகர்வில் திருச்சி மாநாடு புதிய அத்தியாயம் எனக் கருதி வந்த நிலையில், மாநாட்டை நடத்துவதற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் என தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதால், அதிமுக பெயர், கொடி மற்றும் சின்னம் ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறி உள்ளனர். ‘அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுகொண்டதன் மூலம், ஓபிஎஸ் நீக்கம் செல்லும். அதிமுக கட்சிக் கொடியை இனி வேறு யாராவது பயன்படுத்தினால் வழக்கு மேற்கொள்ளப்படும்‘ என எடப்பாடி ஆதரவாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, அதிமுகவின் கட்சிக் கொடி, பெயர், சின்னம் ஆகியவற்றை பயன்படுத்தத் தடை கோரி எடப்பாடி அணியினர் கோர்ட்டை நாடக்கூடும் என்பதால், திட்டமிட்டபடி திருச்சி மாநாடு நடக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. திருச்சி மாநாட்டுக்கு இன்று பந்தக்கால் நடப்பட்ட நிலையில், ஓபிஎஸ் இந்த எதிர்பாராத நெருக்கடியில் சிக்கியிருப்பது அவரது அணியினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com