

எம்.ஜி.ஆரின் 109வது பிறந்த நாள் விழா கடந்த சில தினங்களுக்கு முன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.அப்போது முதல் கட்டமாக 5 தேர்தல் வாக்குறுதிகளை அதிரடியாக அறிவித்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
1. (குல விளக்குத் திட்டம்) அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஒவ்வொரு மாதமும் உதவித் தொகையாக ரூபாய் 2,000 வழங்கப்படும்.
2. நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும். ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
3. அனைவருக்கும் வீடு : (அம்மா இல்லம் திட்டம்) ‘அம்மா இல்லம் திட்டம்’ மூலம், கிராமப்புறங்களில் குடியிருப்பதற்கு சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். அதேபோல், நகரப் பகுதிகளில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி அடுக்குமாடி வீடுகள் கட்டி ‘அம்மா இல்லம் திட்டம்’ மூலம் விலையில்லாமல் வழங்கப்படும். அதைப் போலவே, ஒரே குடும்பத்தில் வசிக்கும் பட்டியலின மக்கள், அவர்களுடைய மகன்கள் திருமணமாகி தனிக்குடித்தனம் செல்கின்றபோது, அரசே இடம் வாங்கி, அவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.
4. 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் : 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கான இத்திட்டம், 150 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டமாக உயர்த்தப்படும்.
5. அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் : மகளிருக்கு ரூ. 25,000 – மானியத்துடன், 5 லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இந்நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 2-ம் கட்ட வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:-
* முதியோர் உதவித்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும்.முதியோர் விதவைப் பெண்கள், முதிர் கன்னிகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் 1200 லிருத்து ரூ. 2,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
* அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும்
* ஜல்லிக்கட்டு போட்டியின் போது வீரர் உயிரிழந்தால் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும்.
* ஜல்லிக்கட்டு விளையாட்டின்போது, காளையை அடக்கும் ஜல்லிக்கட்டு வீரர்கள் அசம்பாவிதம் ஏற்பட்டு உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும். அதேபோல், படுகாயமடைந்தவர்களுக்கு சிகிச்சைக்காக ரூ. 2 லட்சம் வழங்கப்படும்.அரசு அங்கீகரிக்கும் இடத்தில் ஜல்லிக்கட்டு நடத்த ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படும்.
* மாணவர்கள் வங்கிகளில் பெற்ற கல்வி கடனை ரத்து செய்யப்படும்.மாணவர்கள். பெற்றோர்கள் நலன் காக்கும் பொருட்டு, வங்கிகளில் பெற்ற கல்விக் கடனை தள்ளுபடி செய்யும் வகையில், அத்தொகையை அரசே ஏற்கும்
*இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் ஏனைய சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மகளிர் சுயதொழில் தொடங்குவதற்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும்
* மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.