அத்தியாவசியப் பொருட்கள் விலைவாசியை கண்டித்து ஜூலை 20ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!

அத்தியாவசியப் பொருட்கள் விலைவாசியை கண்டித்து ஜூலை 20ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!

‘மக்கள் தினசரி பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசியை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும், அரசின் எல்லா துறைகளிலும் ஊழல் பெருகி இருப்பதைக் கண்டித்தும் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் வரும் 20ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்’ என சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அறிவித் இருக்கிறார். 

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “திமுக அரசுப் பொறுப்பேற்ற இந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தின் மக்கள் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி இருக்கிறது. மக்கள் தினசரி சமையலுக்குப் பயன்படுத்தும் காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து இருக்கிறது. அத்தியாவசியப் பொருட்களை நியாய விலைக் கடைகளில் வழங்குவதாக தம்பட்டம் அடிக்கும் திமுக அரசு அதை முறையாகச் செயல்படுத்தவில்லை. இந்த விலைவாசி உயர்வால் ஏழை எளிய நடுத்தர மக்கள் வாழ முடியாத சூழல் தமிழகத்தில் ஏற்பட்டு இருக்கிறது.

அதிமுக ஆட்சிக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு ஏற்படும் சமயங்களில் எல்லாம், அரசு அதில் தனிக் கவனம் செலுத்தி, அதற்கேற்ற நிதி ஒதுக்கீடு செய்து, அண்டை மாநிலங்களில் இருந்து காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களை கொள்முதல் செய்து நியாய விலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு பண்டகசாலைகள் மூலமாக மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ததோடு, அதை கட்டுக்குள் வைத்தது என்பதை கூற விரும்புகிறேன்.

தமிழக மக்கள் பத்து ஆண்டு காலமாக மறந்து போயிருந்த மின்வெட்டு, திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த அறிவிக்கப்படாத மின்வெட்டால் சிறு, குறு தொழில் முனைவோர் செய்வதறியாது நின்ற நேரத்தில், மூன்று மடங்குக்கு மேலான மின்கட்டண உயர்வை அறிவித்தது திமுக அரசு. அதைத் தொடர்ந்து சொத்து வரி, வீட்டு வரி 100 சதவீதம், கடை வரி 150 சதவீதம் வரை இந்த அரசு உயர்த்தி இருக்கிறது. இதன் காரணமாக வீட்டு வாடகை உயர்வு ஏற்பட்டு இருக்கிறது. மேலும், பால் மற்றும் பால் பொருட்களின் விலை உயர்வு; கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு; வெளியூர் செல்லும் பேருந்துகளின் கட்டண உயர்வையும் அனுமதித்தது திமுக அரசு.

மேலும், பத்திரப் பதிவுத் துறையில் மக்கள் தங்கள் சொத்துக்களை சந்ததியினருக்கு பெயர் மாற்றம் செய்தல், குடியிருப்பதற்கு மனை வாங்குதல், சொத்துக்களை அடமானம் வைத்து கடன் பெறுதல் உள்ளிட்ட பதிவுகளுக்கு பல மடங்கு கட்டணங்களை உயர்த்தி, மக்களை மேலும் கடனாளிகளாக ஆக்கப் பார்க்கிறது இந்த அரசு.

இரண்டு ஆண்டு திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளும் ஊழல்மயமாக்கப்பட்டு, நாட்டின் ஜனநாயகம் கேலிப் பொருளாக்கப்பட்டு மக்கள் வாழ்வு சீரழிக்கப்படுகிறது. மின்சாரத் துறை, டாஸ்மாக், பத்திரப் பதிவுத் துறை என தொடங்கி, சகல துறைகளிலும் ஊழல் கோலோச்சுகிறது. சுமார் 30 ஆயிரம் கோடிக்கு மேல் முறைகேடாக முதல்வரின் மகனும், மருமகனும் ஓர் ஆண்டில் சேர்த்திருக்கிறார்கள் என்று முன்னாள் நிதி அமைச்சர், தற்போதைய அமைச்சர் பேசிய ஆடியோ பதிவுக்கு முதல்வர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; எந்த பதிலும் கொடுக்கவில்லை; எந்த விசாரணையும் இல்லை.

‘அனுமதியின்றி நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பார்கள் இயங்குகிறது’ என்று நான் குற்றச்சாட்டு வைத்து, போராடிய நிலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பார்களுக்கு சீல் வைத்தது திமுக அரசு என்றால், இரண்டாண்டு காலம் அந்த பார்கள் அனுமதியின்றி இயங்கியது உண்மைதானே. அப்படியெனில், இரண்டாண்டுகள் அந்த முறையற்ற பார்களில் இருந்து பல கோடி ரூபாய் ஊழல் செய்யப்பட்டது தெரிய வருகிறது. இதுபோல, அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. ஊழலில் திளைக்கின்ற திமுக அரசின் மக்கள் விரோத, ஜனநாயக விரோதப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிகத்தில் இவ்வளவு அவலங்கள், வன்முறைகள், விலைவாசி உயர்வு, பல்வேறு துறைகளில் ஊழல் ஆகிய எதையும் கண்டுகொள்ளாமல், குடும்ப நலன் ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு மு.க.ஸ்டாலின் பொம்மை முதல்வராக இருந்து வருகிறார். எதற்கெடுத்தாலும் மத்திய அரசு மீது பழிபோட்டு தப்பிக்கப் பார்க்கிறார். முதல்வரின் இத்தகைய மக்கள் விரோதச் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த நிலையில், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும்; அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுவதைக் கண்டித்தும்; இவற்றையெல்லாம் கண்டும் காணாமல் இருந்து வரும் பொம்மை முதல்வர் மு.க.ஸ்டாலினை கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், 20.07.2023 அன்று காலை 10 மணியளவில், வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

அதிமுக அரசின் சார்பில், திமுக அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் அந்த அறிக்கையில் கூறி இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com