செந்தில் பாலாஜியை நீக்க மாவட்ட தலைநகர்களில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

செந்தில் பாலாஜியை  நீக்க  மாவட்ட தலைநகர்களில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட, செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த திமுக அரசு தவறி உள்ளது என அதிமுகவினர் குற்றம் சாட்டினர். ஒருங்கிணைந்த சென்னை மாவட்டம் மற்றும் புறநகர் மாவட்டம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான கழக நிர்வாகிகள் பங்கேற்று தி.மு.க. அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர். செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர்.

மதுரையில் செல்லூர் ராஜூ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு, வேலூர், சேலம், கோவை, உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் அதிமுக சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மணிக்கூண்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கிழக்கு மாவட்ட செயலாளருமான நத்தம் இரா.விசுவநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தி.மு.க.வின் கருவூலமாக செந்தில்பாலாஜி செயல்பட்டு வருகிறார். அதனால்தான் அமலாக்கத்துறையினர் கைது செய்தவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர அவசரமாக பதட்டத்துடன் அவரை சென்று சந்தித்தார். உச்சநீதிமன்றம் அறிவுறுத்தலின்படி அமலாக்கத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் ஒரு அமைச்சரை விசாரணையில் இருந்து காப்பாற்ற தி.மு.க அரசு முயல்வது வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத ஒன்றாகும்.

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக்கோரி ஈரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசினார்.

மின் விநியோகம் அவ்வப்போது தடைப்படுகிறது. பேருந்து சேவை குறைக்கப்பட்டதால் இலவச பேருந்து பயணமும் கிடைக்கவில்லை. கஞ்சா மற்றும் கள்ளச்சாராயம் அதிகரித்து வருகிறது. பல பகுதிகளில் குடிநீர் வினியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. வரி பல மடங்கு உயர்த்தப்பட்டது. வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பால் விலை, சொத்து, தண்ணீர் வரி உயர்த்தப்பட்டது.

மதுவின் மூலம் தி.மு.க.வுக்கு பல கோடி ரூபாய் தினசரி கிடைக்கிறது. நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்ற தனது தேர்தல் வாக்குறுதியை தி.மு.க. நிறைவேற்றவில்லை. அ.தி.மு.க. ஆட்சியின் திட்டங்கள் மட்டுமே தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளன. தி.மு.க. ஊழலால் வரும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். அதைத்தொடர்ந்து தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் 234 தொகுதியில் அ.தி.மு.க அபார வெற்றி பெறும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com