ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அந்தியூர் தாலுகா பர்கூர் மலைப் பகுதியில் வனவிலங்கு சரணாலயம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்து இருக்கிறது. இந்த வனப்பகுதி, சுற்றுவட்டார கிராம மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் ஆடு, மாடுகளை மேய்த்தல் மற்றும் விவசாயத்துக்கு பேருதவியாக இருக்கிறது. திமுக அரசின் இந்த முடிவைக் கண்டித்து அதிமுக சார்பில் நாளை மறுநாள் பர்கூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுகா, பர்கூர் ஊராட்சிக்குட்பட்ட 35 குக்கிராமங்களில் சுமார் 18,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் ஆடு, மாடுகளை இந்த வனப் பகுதிகளில் மேய்ப்பது, விவசாயம் செய்வது ஆகும். மேலும், இவர்கள் இந்த வனப் பகுதிகளில் விளையக்கூடிய நெல்லிக்காய், சீமார்புல், கடுக்காய் போன்றவற்றைச் சேகரித்து, அவற்றை விற்பனை செய்து வருமானம் ஈட்டி பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இப்பகுதி மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் விதமாக திமுக அரசு பர்கூர் மலைப் பகுதியை வனவிலங்கு சரணாலயமாக அறிவித்து இருக்கிறது. இதனால் இவர்கள் இனி வனப் பகுதிகளில் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல முடியாத சூழ்நிலையும், பழங்குடியினர் நெல்லிக்காய், சீமார்புல், கடுக்காய் போன்றவற்றை சேகரிக்க முடியாத சூழ்நிலையும் உருவாகும். மேலும், தங்களின் விவசாயப் பொருட்களை வாகனங்களில் எடுத்துச் செல்வதற்கும், மருத்துவ சிகிச்சைக்காக வாகனங்களை இயக்குவதற்கும் வனத்துறை அதிகாரிகள் தடை செய்யும் நிலையும் ஏற்படும். அதுமட்டுமின்றி, மலைவாழ் மக்களின் விளை நிலங்களின் மதிப்பு குறையும் சூழ்நிலையும் ஏற்படும். இதனால் இப்பகுதியில் வாழும் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை முற்றிலும் இழக்கும் அபாய சூழ்நிலை உருவாகி உள்ளது.
அதனால், பர்கூர் மலைப் பகுதியை வனவிலங்கு சரணாலயமாக அறிவித்துள்ள திமுக அரசைக் கண்டித்தும், இந்தத் திட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தியும், அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், 6.7.2023 அன்று காலை 11 மணிக்கு, அந்தியூர் தொகுதி, பர்கூர் ஊராட்சி, தாமரைகரை எனும் இடத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், அதிமுக இந்நாள் மற்றும் முந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அனைத்து அதிமுக பொறுப்பு நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும், ஏழை, எளிய மக்கள் நலனை முன்வைத்து நடைபெறும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், விவசாய மக்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு, திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனங்களை தெரிவிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.